சரிந்துவரும் ஸ்டார்ட்-அப் ராஜ்ஜியம்

By வெ.சந்திரமோகன்

2022-ம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இறங்குமுகத்தில் இருப்பதாகப் பேச்சு அடிபடுகிறது. வெளிநாடுகளிலிருந்து பெரும் முதலீடுகளை ஈர்த்த நிறுவனங்கள், தாக்குப்பிடிக்க முடியாமல் மூடு விழாவை நோக்கி நகர்கின்றன. புகழ்பெற்ற நிறுவனங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் ஊழியர்கள் வேலையிழந்திருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், கடந்த ஆண்டில் வரலாறு காணாத உச்சத்துக்குச் சென்ற நிறுவனங்கள் இந்த ஆண்டில் சரிவைச் சந்தித்திருப்பதுதான். ஒரே ஆண்டில் இத்தகைய சரிவு எப்படி ஏற்பட்டது? இந்திய ஸ்டார்ட்-அப் உலகில் என்னதான் நடக்கிறது?

ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் என்றால் என்ன?

சந்தைக்குப் புதிதான தயாரிப்புகளைக் கொண்டுவருகின்ற அல்லது ஏற்கெனவே இருக்கும் தயாரிப்புகளை முற்றிலும் புதிய வடிவில் கொண்டுவருகின்ற நிறுவனங்களும், புதிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் எனப் பொதுவாக அழைக்கப்படுகின்றன. இந்நிறுவனங்களின் புத்தாக்கச் சிந்தனைதான் பிற நிறுவனங்களிலிருந்து இவற்றை வேறுபடுத்துகிறது.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிலேயே 1 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் யுனிகார்ன் நிறுவனங்கள் என அழைக்கப்படுகின்றன. 10 பில்லியன் டாலரைத் தாண்டும் நிறுவனங்கள் டெக்காகார்ன் என அழைக்கப்படுகின்றன. பெருந்தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் போன்றவை உதாரணங்கள். ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்குபவர்கள் யுனிகார்ன் அந்தஸ்தையேனும் பெற்றுவிட வேண்டும் எனும் கனவில் இருப்பார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை 2005-ம் ஆண்டுவாக்கில் 3,500 சொச்சம் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இருந்தன. 2006, 2007, 2008 எனத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் தலா 1,000 என புதிய நிறுவனங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்தது. 2009-ல் புதிதாக 2,000 நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. 2010-ல் அந்த எண்ணிக்கை இரண்டு மடங்கானது. 2012-ல் புதிதாக மேலும் 5,000 நிறுவனங்கள் முளைத்தன. 2015-ல் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. எண்ணிக்கை அடிப்படையில் இந்திய ஸ்டார்ட்-அப் உலகில் நிகழ்ந்த முக்கிய வளர்ச்சி அது. ஆனால், அதன் பின்னர் புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. கடந்த ஆண்டு புதிய நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்தாலும், வேறொரு விஷயத்தில் உச்சம் தொட்டது இந்திய ஸ்டார்ட்-அப் உலகம்.

சாதனையும் சரிவும்

ஆம்! கடந்த ஆண்டு மட்டும் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு 42 பில்லியன் டாலர் முதலீடு குவிந்ததாக, ஸ்டார்ட்-அப், இணைய நிறுவனங்கள் குறித்த பல்வேறு தகவல்களைத் திரட்டி வெளியிடும் இன்க்42 (Inc42) ஊடக மையம் தெரிவித்தது. அதற்கு முந்தைய ஆண்டில் 11.9 பில்லியன் டாலர் முதலீடு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான ஒப்பந்தங்களாக 108 மெகா ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. 2014 முதல் இதுபோன்ற மெகா ஒப்பந்தங்கள் அதிகரித்து வந்தாலும், மொத்த ஒப்பந்தங்களில் 41 சதவீதம் கடந்த ஆண்டு கையெழுத்தானவை. இந்தத் தகவல் ஒன்றே, கடந்த ஆண்டு ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் அடைந்த அசுர வளர்ச்சிக்குச் சான்று.

அதே ஆண்டில், புதிதாக 42 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் யுனிகார்ன் நிறுவனங்களாக உயர்ந்தன. அதற்கு முந்தைய ஏழு ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக யுனிகார்ன் அந்தஸ்தைப் பெற்ற நிறுவனங்களின் எண்ணிக்கையை ஒப்பிட இது அதிகம். பெருந்தொற்று, பொதுமுடக்கம் என மிகப் பெரிய அளவிலான பிரச்சினைகளைச் சந்தித்த பின்னரும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் இந்த அளவுக்கு நிதி குவிந்தது சர்வதேச அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சீனாவில் ஒரு காலத்தில் 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்டிருந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் இந்தக் கட்டுப்பாடுகள் சரிவைக் கொண்டுவந்தன. இதையடுத்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியா பக்கம் திரும்பினர். இந்திய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானது எனும் எண்ணம் அவர்களை ஊக்குவித்தது.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வெற்றியை மத்திய அரசு தனது சாதனையாகச் சொல்லிக்கொள்ளவும் தவறவில்லை. புதிய இந்தியாவின் முதுகெலும்பாக ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் அமையும் என 2022 ஜனவரி 15-ல் அந்நிறுவனங்களின் தலைவர்களுடன் காணொலிச் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். ஆனால், மோடி எதிர்பார்க்கும் முதுகெலும்பு எத்தனை பலவீனமானது என விரைவிலேயே தெரியவந்தது.

இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் 37 சதவீதம் முதலீடு குறைந்துவிட்டது. சொமேட்டோ நிறுவனத்தால் வாங்கப்பட்ட பிளிங்க்-இட் நிறுவனத்தைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர். பைஜூஸ் நிறுவனத்திலிருந்து 600 பேர் வெளியேற நேர்ந்தது. எம்-ஃபைன் நிறுவனம் 75 சதவீதம் பேரைப் பணிநீக்கம் செய்தது. கார்ஸ்-24 நிறுவனம் 600 பேரை வீட்டுக்கு அனுப்பியது. யுனிகார்ன் அந்தஸ்தில் உள்ள நிறுவனங்களிலும் வேலையிழப்பு நிகழ்ந்திருக்கிறது.

யுனிகார்ன் அந்தஸ்தைப் பெறும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. ஏப்ரல் மாதம் ஒரு நிறுவனத்தால்கூட யுனிகார்ன் அந்தஸ்தைப் பெற முடியவில்லை. பேடிஎம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் யுனிகார்ன் அந்தஸ்தை இழந்துவிட்டன. அமெரிக்காவிலும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நெருக்கடியைச் சந்திக்கின்றன. டெஸ்லா போன்ற பெரிய நிறுவனங்களும் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகின்றன. ஆனால், இந்தியாவில் நிலைமை ரொம்பவும் மோசம். இதையடுத்து ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எதிர்காலம் என்னவாகும் எனும் அச்சம் எழுந்திருக்கிறது.

பின்னணி என்ன?

இணையம் அடிப்படையிலான தொழில் துறையில் இதுபோன்ற வசந்தங்களும் சரிவுகளும் வழக்கமாக நடப்பதுதான். புத்தாக்கச் சிந்தனையுடன், சமகாலத்தைத் தாண்டிய திட்டங்களுடன் தொடங்கப்பட்ட பல நிறுவனங்கள், அந்தத் திட்டங்களைச் சாத்தியமாக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாமல் துவண்டுவிடுவதுண்டு. பல நிறுவனங்கள் இணையத் தொழில்நுட்பச் சிக்கல்கள், பயனாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியாத சூழல் என்பன உள்ளிட்ட காரணிகளால் மூடுவிழா கண்டிருக்கின்றன. அப்போதைய சூழல்களைப் பொறுத்து முதலீட்டாளர்கள் பின்வாங்குவதும் உண்டு. சர்வதேச அளவில் இதுதான் நிதர்சனம்.

பொதுவாகவே, முதலீட்டாளர்கள் தங்களுக்கு லாபம் கிடைக்காது, போட்ட பணம் திரும்ப வராது என்பதற்கான சமிக்ஞைகள் தெரிந்தால் முதலீடுகளைத் திரும்பப் பெறத் தொடங்குவார்கள். இந்திய ஸ்டார்ட்-அப் துறையில் வசந்தத்தைக் கொண்டுவந்த முதலீட்டாளர்கள் இன்றைய சரிவுக்கும் வழிவகுத்ததாகப் பேசப்படுகிறது. லாபத்தை அதிகரிக்க வேண்டும்; செலவுகளைக் குறைக்க வேண்டும் என முதலீட்டாளர்கள் விதித்த நிபந்தனைகள் ஒரு கட்டத்தில் அழுத்தமாக மாறத் தொடங்கின.

கரோனா பெருந்தொற்று காரணமாக விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகள்; உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகள், எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டிருக்கும் சுணக்கம் எனப் பல காரணிகள் முன்வைக்கப்படுகின்றன.

பொதுமுடக்க காலத்தில் முடங்கிக்கிடந்த மக்கள், பொருட்களையும் சேவைகளையும் பெற செயலிகளை அதிக அளவில் சார்ந்திருக்கத் தொடங்கினர். இதையடுத்து, அதைச் சார்ந்த செயலிகள் மூலம் இயங்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் அதிகரித்தன. ஆனால், பொதுமுடக்கம் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுவிட்டதாலும், தடுப்பூசிகளின் துணையால் பெருந்தொற்று பாதிப்புகளை எதிர்கொள்ளும் சூழல் உருவாகிவிட்டதாலும் அலுவலகங்கள், பள்ளிகள், தொழில் நிறுவனங்கள் திறக்கப்பட்டுவிட்டன. சகஜமாக வெளியில் சென்றுவரும் மக்கள் செயலிகளை அதிக அளவில் பயன்படுத்துவதில்லை. இந்தியாவில் அதிகரித்துவரும் பணவீக்கமும் இந்த மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

அரசின் பங்கு என்ன?

இதில் தொழிலாளர் சட்டத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் மாற்றங்கள் வேலைகள் பறிபோக முக்கியக் காரணம். முந்தைய தொழிலாளர் சட்டத்தின்படி 100 பேருக்குக் குறைவானவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள், ஊழியர்களைச் சேர்க்கவோ நீக்கவோ அரசின் அனுமதி பெற வேண்டியதில்லை. ஆனால், திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்களின்படி 300 பேர் பணிபுரியும் நிறுவனங்கள்கூட அரசிடம் அனுமதி பெறாமல் ஆட்குறைப்பு செய்ய முடியும். வேலைநீக்கம் செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகுவதற்கான வாய்ப்பும் அருகிவிட்டது.

மத்திய அரசு கொண்டுவரும் தரவுப் பாதுகாப்பு மசோதாவின்படி, தனியார் நிறுவனங்கள், பயனாளர்களின் தரவுகளைச் சேகரிக்க அவர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும். சமூக வலைதளங்கள் முதல் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வரை அனைத்துக்கும் இந்த விதிகள் பொருந்தும். விதிமீறலில் ஈடுபடும் நிறுவனத்துக்கு 15 கோடி ரூபாய் அல்லது அந்நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தில் 4 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும். சமூகவலைதளங்களில் வெறுப்புப் பேச்சைத் தூண்டுபவர்கள் யார் எனக் கண்டறிந்து அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இது பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை யோசிக்க வைத்திருக்கிறது.

இனி என்ன?

இந்தியா அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்பதால், இங்கு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தயாரிப்புகள் சந்தையில் நன்கு விற்பனையாகும் என ஆரம்பத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கருதினர். எனினும், அதிகரிக்கும் பணவீக்கமும், விலைவாசி உயர்வை எதிர்கொள்ள முடியாமல் தங்கள் தேவைகளைக் குறைத்துக்கொள்ளும் மக்களும் அந்த நம்பிக்கையைப் பொய்க்கச் செய்துவிட்டனர். இலவச சேவை வழங்கி விளம்பரம் மூலம் வருமானம் ஈட்டும் ஃபேஸ்புக், யூடியூப் போன்ற நிறுவனங்கள் இதில் வேறு ரகம். ஆனால், மற்ற நிறுவனங்களால் தாக்குப்பிடிக்க முடியாது. இப்போதே முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்க விரும்புபவர்களும் அமெரிக்கா, பிரிட்டன், துபாய் போன்ற நாடுகளை நோக்கி தங்கள் பார்வையைத் திருப்பியிருக்கின்றனர்.

செயலி அடிப்படையில் இயங்கும் பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், தொடர்ந்து பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும். அதற்குத் தொடர்ச்சியான விளம்பரங்கள் அவசியம். ஆக, செலவு தொடர்ந்துகொண்டே இருந்தால், செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் எதிர்கொள்ளும். அப்படியான சூழலில் ஊழியர்களின் சம்பளம் குறையும், வேலை பறிபோகும். நிலைமை சீராக வழியில்லை என்பதால் மேலும் பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மூடப்படும் என்பதே கசப்பான உண்மை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE