மாஜி ராணுவ வீரரைச் சுற்றி வளைத்து வெட்டிக்கொன்ற மர்மக்கும்பல்:கேரள பதிவெண் கொண்ட காரில் வந்தவர்கள் யார்?

By காமதேனு

தேனி அருகே கேரள பதிவெண் கொண்ட ஜீப்பில் வந்த மர்மநபர்கள் 68 வயதான முன்னாள் ராணுவ வீரரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன்

தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராதாகிருஷ்ணன்(68). இவர், இன்று காலை 11 மணி அளவில் அவர் சொந்தமாக நடத்தி வரும் விடுதியில் கணக்கு வழக்குகளை பார்த்து விட்டு சந்தைப்பேட்டை வழியாக வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தலைமை தபால் நிலையம் அருகே வாகனத்தை நிறுத்தி வீட்டிற்கு பலகாரங்கள் வாங்கி கொண்டிருந்தார்.

அச்சமயம், அங்கு கேரள பதிவெண் கொண்ட ஜீப்பில் வந்த நான்கு பேர் கொண்ட மர்மக்கும்பல் ராதாகிருஷ்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போடி நகர் காவல்துறையினர், ராதாகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE