காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்கும் வெவ்வேறு பிரிவுகளில் வெள்ளி, வெண்கலம் என இரண்டு பதக்கங்களை வென்று இந்தியா வெற்றிக் கணக்கைத் தொடக்கியுள்ளது.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 215 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் நாள் போட்டிகளில் இந்திய அணி ஒரு பதக்கமும் பெறவில்லையெனினும், இந்தியர்கள் விளையாடிய பல ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக பாட்மிட்டனில் 5-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா. அதுபோல் நேற்று நடைபெற்ற ஹாக்கி, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாம் நாளான இன்று பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் சங்கெத் மகாதேவ் சர்க்கார் பங்கேற்றார். 55 கிலோ பளு தூக்கும் பிரிவில் கலந்துகொண்ட அவர், மொத்தம் 248 கிலோ தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்து, வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மொத்தம் அவர் 248 கிலோ தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்து இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்துள்ளார். அதுபோல் 61 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில் குருராஜ் புஜாரி வெண்கலப் பதக்கம் வென்றார். கடந்த 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மூன்றாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. அது போல் இந்த ஆண்டும் இந்தியா வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.