சிங்கப்பூரிலிருந்து வந்த புதுக்கோட்டை வாலிபருக்கு குரங்கு அம்மை?- வீடு புகுந்து தூக்கினர் சுகாதாரத்துறை அதிகாரிகள்!

By காமதேனு

இந்திய அளவில் இதுவரை நான்கு பேருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுவரையில் தமிழகத்தில் தலை காட்டாமல் இருந்த குரங்கு அம்மை சிங்கப்பூரிலிருந்து வந்த இளைஞர் ஒருவரால் தமிழகத்திலும் நுழைந்திருக்கிறதோ என்று தமிழக சுகாதாரத்துறை அச்சம் அடைந்துள்ளது.

சிங்கப்பூரிலிருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சிக்கு வந்த விமானத்தில் வந்து இறங்கினார் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தைச் சேர்ந்த 35 வயது வாலிபர். கடந்த சில வருடங்களாக சிங்கப்பூரில் பணிபுரிந்தவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். தற்போது கரோனா மற்றும் குரங்கு அம்மை பாதிப்புகள் பல நாடுகளில் தீவிரமடைந்து இருப்பதால் அனைத்து பயணிகளுக்கும் திருச்சி விமான நிலையத்தில் முறைப்படியான பரிசோதனைகள் நடத்தப்படுகிறது.

அப்படி அந்த பயணிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, அந்த பயணியை தனிமைப்படுத்திய மருத்துவ குழுவினர், அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், நோய் குறித்த அச்சத்தில் இருந்த அந்த இளைஞரிடம் அச்சப்பட வேண்டாம், நோய் பாதிப்பு அதிகமில்லை என ஆறுதல் படுத்தும் வகையில் பேசியிருக்கிறார். இதனையடுத்து தனக்கு நோய் பாதிப்பு இல்லை என்று கருதிய அந்த நபர் மருத்துவமனையில் இருந்து சொல்லிக் கொள்ளாமலே தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

குரங்கு அம்மை நோய் அறிகுறிகளுடன் இளைஞர் ஒருவர் வந்திருப்பதை அறிந்த சுகாதாரத் துறையினர் அவரிடம் மேற்கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக நேற்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று அந்த இளைஞரை தேடினர். ஆனால் அவர் அங்கு இல்லாதது அப்போதுதான் அவர்களுக்கு தெரியவந்தது. அதனால் அவரது பாஸ்போர்ட் முகவரியை கண்டறிந்து அது குறித்து புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அதிகாரிகள் உடனடியாக அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரிடம் பேசி நோய் பாதிப்புகள் குறித்த விவரங்களை எடுத்துச் சொல்லி அவரை அழைத்துக் கொண்டு வந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரிடமிருந்து ரத்தம், சிறுநீா்,தொண்டை மற்றும் தோல் பகுதிகளில் எச்சில் போன்ற சேகரிக்கப்பட்டு, புனேவிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து வரும் ஆய்வு முடிவுக்குப் பிறகே இது குரங்கு அம்மை நோய் தானா என்பதை உறுதி செய்ய இயலும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE