இனி 3.20 லட்சம் கட்ட வேண்டாம்; 30 ஆயிரம் கட்டினால்போதும்: வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு சலுகை

By காமதேனு

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் தமிழகத்தில் பயிற்சி பெற வெறும் ரூ.30 ஆயிரம் கட்டினால் போதும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் குரங்கு அம்மை அறிகுறியுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் ரத்த மாதிரி ஆய்வு கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கன்னியாகுமரியில் குரங்கு அம்மை அறிகுறி என்று வெளியான தகவல் உண்மை இல்லை என்றும் குரங்கு அம்மை நோய் குறித்து யூகங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்றும் தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்றும் கூறினார்.

தமிழகத்தில் 97 சதவீத பேர் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்த அமைச்சர், இரண்டாம் தவணை தடுப்பூசியை 85.80 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர் என்றும் ஆகஸ்ட் 7-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்லும் மாணவர்கள் படிப்பு முடிந்து திரும்பிய பிறகு இன்டன்ஷிப் பயிற்சி பெற கட்டணமாக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் 3.20 லட்சமும், மக்கள் நல்வாழ்வுத்துறை 2 லட்சமும் சேர்த்து மொத்தம் 5.20 லட்சம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பயிற்சி பெறுபவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் மருத்துவ பல்கலைக்கழகம் வசூலித்த 3.20 லட்சத்தை குறைத்து வெறும் 30 ஆயிரம் மட்டும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE