அரசு பெண்கள் பள்ளிகள் இருபாலர் பள்ளிகளாக மாற்றப்படும்: அதிரடியாக முடிவெடுத்த மாநிலம்!

By காமதேனு

அசாம் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பெண்கள் பள்ளிகளையும் இருபாலர் பள்ளிகளாக மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அசாம் மாநில அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின்னர் பேசிய கல்வி அமைச்சர் ரோனோஜ் பெகு, “வரலாற்றுப் பின்னணி கொண்ட சில பள்ளிகளைத் தவிர, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பெண்களுக்கான பள்ளிகளும் இருபாலரும் பயிலும் பள்ளிகளாக மாற்றப்படும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 3 முதல் 12-ம் வகுப்பு வரை அறிவியல் மற்றும் கணிதப் பாடங்கள் அசாமி, போடோ, பெங்காலி அல்லது பிற மொழிகளுக்கு பதிலாக ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

மேலும், “ ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 - 10 பள்ளிகளில் அஸ்ஸாமி, போடோ மற்றும் பெங்காலி மொழிக்கு இணையாக ஆங்கிலம் பயிற்றுவிக்கும் மொழியாக இருக்கும். இந்தப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்கள் விருப்ப மொழியை தேர்ந்தெடுக்கலாம். மேல்நிலைப் பள்ளிகளில், சமூக அறிவியல் பாடத்திற்குப் பதிலாக புவியியல் மற்றும் வரலாறு ஆகிய இரண்டு பாடங்களைக் கொண்டுவர அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் உள்ள சுமார் 6,000 தனியார் பள்ளிகளும் மாநில கட்டண ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்வதை அரசு கட்டாயமாக்கியுள்ளது " என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE