கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகள் மூவர் மற்றும் ஆசிரியர்கள் இரண்டு பேருக்கு ஜாமீன் வழங்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த 13 ம் தேதியன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். அந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகளான முதல்வர் சிவசங்கரன், தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை சிபிசிஐடி போலீஸார் ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து சுமார் 12 மணி நேரம் வரை வைத்திருந்து விசாரித்து பின்னர் நீதிமன்ற காவலில் ஒப்படைத்தனர். இந்நிலையில் அவர்கள் 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் இன்று நீதிபதி சாந்தி அவர்களின் ஜாமீன் மனுவை விசாரித்தார்.
அப்போது, அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி, வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, சிபிசிஐடி போலீஸார் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்திருப்பதால் அதன் அடிப்படையில் புதிய ஜாமீன் மனுவை முதல் தகவல் அறிக்கை எண்ணுடன் தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தினார். அத்துடன் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.