இலவச கல்வி கொடுப்பதாக ஆசைவார்த்தை; கடத்தப்பட்ட பெண் குழந்தைகள்: சிக்கிய கேரள போதகர்

By காமதேனு

ராஜஸ்தானில் இருந்து கல்வி கொடுப்பதாக ஏமாற்றி 12 குழந்தைகளைக் கடத்தியதாக கேரளத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம், எர்ணாக்குளம் அருகில் உள்ள பெரும்பாவூரில் கருணாபவன் என்னும் அறக்கட்டளை இயங்கிவருகிறது. இதன் இயக்குநராக போதகர் ஜேக்கப் வர்க்கீஸ் என்பவர் உள்ளார். இவர், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 11 பெண் குழந்தைகளையும், மத்தியப் பிரதேசத்தில் இருந்து ஒரு பெண் குழந்தையையும் இலவசக் கல்வி கொடுப்பதாக கடத்தி வந்ததாக இந்திய தண்டனைச் சட்டத்தின் 370-வது பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இவருக்கு உடந்தையாக இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த லோகேஷ்குமார்(29), ஸ்யாம் லால்(25) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

போதகர் ஜேக்கப் வர்க்கீஸ் நடத்திவரும் கருணா பவனுக்கு சட்டப்படி அங்கீகாரமே இல்லை. இந்நிலையில் இந்த இல்லத்திற்கு ராஜஸ்தானில் இருந்து பெண் குழந்தைகள் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் மீது சந்தேகப்பட்ட ரயில்வே போலீஸார் நடத்திய விசாரணயிலேயே கருணா பவனுக்கு அழைத்துச் செல்லப்படுவது தெரியவந்தது. அதேநேரத்தில் கேரள போலீஸார் விசாரணை நடத்தி அதற்கு அனுமதியில்லை எனவும் அறிக்கை கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து போதகர் ஜேக்கப் வர்க்கீஸ் உள்பட மூன்றுபேரும் கைது செய்யப்பட்டனர்.

ராஜஸ்தானில் இருந்து அழைத்துவரப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு கோழிக்கோட்டில் குழந்தைகள் நலக்குழுவின் மேற்பார்வையில் இல்லம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குழந்தை கடத்தல் வழக்கில் போதகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE