தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துகளோடு செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா தொடங்கியது. இதில் கமல்ஹாசன் குரலில் தமிழர் வரலாற்றை விளக்கும் நிகழ்த்து கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு மாமல்லபுரம் சிற்பத்தினாலான நினைவுப் பரிசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
வரவேற்புரையாற்றிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், “பிரதமர் மோடியின் முயற்சியால் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகம் நடத்த முடிந்தது. ஒரு குடும்பமாக நாம் எல்லோரும் இங்கு ஒருங்கிணைந்துள்ளோம் ” என்றார்.
இதைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் குரலில் தமிழ்நாட்டின் கலாச்சார வளர்ச்சி குறித்துக் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. 1200 ஆண்டுகளுக்கு முன் மயிலாடும்பாறையில் தமிழர் கலை, கலாச்சாரம் செழித்து இருந்ததற்கான சான்றுகளும், சேரர், சோழர், பாண்டியர்களின் பண்பாட்டு வரலாறு குறித்து நடிகர் கமல்ஹாசன் குரலில் நிகழ்த்துக்கலை நடைபெற்றது. இதில் நடனக்கலைஞர்களின் கண்கவர் நடனம் காண்போரை கவர்ந்தது.