பெண் இன்ஸ்பெக்டர் மீது 6 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்.பிக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

By காமதேனு

21 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கடந்த 2019-ல் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்தவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவரை விடுவித்து, போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி தாலுகா வண்ணார்பேட்டையைச் சேர்ந்தவர் வடிவேல்(60). இவர் விற்பனை செய்வதற்காக இரு இருசக்கர வாகனங்களில் சுமார் 21 கிலோ கஞ்சா வைத்திருந்த போது 2019 ஏப்ரல் 4-ம் தேதி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட இரண்டாவது கூடுதல் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமார் இன்று தீர்ப்பளித்தார். அதன்படி, வடிவேல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவரை விடுவித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை பெற்றுத் தரும் வகையில் வழக்கை முறையாக நடத்தாதற்காக அப்போதைய காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 6 மாதத்தில் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE