புகார் அளிக்க வந்த பெண்ணிடம் நெருங்கிப் பழகி ரூ. 6 லட்சம் மோசடி செய்த புகாரில், விளாத்திகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஆனந்த தாண்டவம். இவர், மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய போது சொத்து பிரச்சினை தொடர்பாக 2019-ம் ஆண்டு, கோமதி என்பவர் புகார் அளித்தார். இதுகுறித்தான விசாரணையின்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு, இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர்.
அப்போது, ஆனந்த தாண்டவம், கோமதியிடம் ரூ. 6 லட்சம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில், மன உளைச்சலுக்கு ஆளான கோமதி தற்கொலைக்கு முயன்ற போது உறவினர்கள் காப்பாற்றி உள்ளனர். இந்நிலையில், தனது பணத்தை மீட்டு தருமாறு, கடந்த ஏப்ரல் மாதம், டிஜிபி அலுவலகத்தில் கோமதி புகார் அளித்தார்.
இதுதொடர்பாக துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவத்தை பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டார்.