சாலைகளுக்காக அழிக்கப்பட்ட பாரம்பரிய படித்துறைகள்: அழகைத் தொலைத்த மதுரை வைகை ஆறு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாநகர் கிராமங்கள் நிறைந்தது. இந்த கிராமங்களுக்கு வளத்தையும், உயிரோட்டத்தையும், கொண்டாட்டத்தையும் தந்து கொண்டிருந்த வைகை ஆறு, தற்போது ஆரவாரமில்லாமல் நிரந்தர வறட்சிக்கு இலக்காகி விட்டது. கடந்த காலத்தில் வைகை அணை கட்டுவதற்கு முன் வைகை ஆற்றில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டப்படி கரைபுரண்டு ஓடியது. இந்த வைகை ஆற்றின் கரையில் வழிநெடுக படித்துறைகள் இருந்தன.


எத்தனைப் படித்துறைகள்?

மதுரை மாநகரில் 12 கி.மீ, செல்லக்கூடிய வைகை ஆற்றில் மட்டும் ஆரப்பாளையம், தத்தனேரி, புட்டுதோப்பு, செல்லூர் எல்ஐசி பாலம், திருவாப்புடையார் கோயில், பேச்சியமம்மன் கோயில், அனுமார் கோயில், திருமலை ராயர், ஓபுளா, வெங்கடபதி ஐயங்கார், கள்ளுக்கடை சந்து, அண்ணா நகர், மதிச்சியம் போன்ற இடங்களில் படித்துறைகள் இருந்தன. இவற்றில் கோயில் திருவிழா, பூஜைகளுக்கு ஆற்றில் இருந்து நீர் எடுப்பதற்கும், பக்தர்கள் பால்குடம், சக்திகரகம் எடுப்பதற்கும் பயன்படுத்தினர். இறந்தவர்கள் அஸ்தியைக் கரைக்கவும், அவர்கள் குளிக்கவும் பயன்படுத்துறைகளைப் பயன்படுத்தினர். மக்கள் இந்த படித்துறைகளில் அன்றாடவும் நீராடவும், துணிகளைத் துவைக்கவும் செய்தனர். வைகை ஆற்றில் பெரும் வெள்ளம் வந்தால் கூட அழியாத வகையில் இந்த படித்துறைகள் கற்களால் அமைக்கப்பட்டிருந்தன.

அகற்றப்பட்ட அவலம்

வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் இந்த படித்துறைகள் பராமரிப்பு இல்லாமல் பாழாகிக் கிடந்தன. அதன்பின் வைகை ஆற்றின் கரையோரம் மதுரை நகரில் மண் சாலை அமைத்தபோதே நகர் பகுதியில் இருந்த பல படித்துறைகள் காணாமல் போனது. அதன்பின், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நான்கு வழிச்சாலை அமைத்தபோது பெரும்பாலான படித்துறைகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. தற்போது மாநகராட்சி மக்கள் குளிக்க சிமெண்ட் படிக்கட்டுகள் அமைத்து படித்துறைகளை அமைத்துள்ளனர். தற்போது வைகை ஆற்றில் தண்ணீரும் வருவதில்லை. மாநகராட்சி கட்டிய படித்துறைகளை மக்களும் பயன்படுத்துவதில்லை. இந்த படித்துறைகளில் குப்பை, மது பாட்டில்கள் கொட்டப்படுகின்றன. இதனால் மக்கள் இறங்க முடியாத அளவிற்கும், பயன்படுத்த முடியாத அளவிற்கும் படித்துறைகள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

பாரம்பரியம் தெரியவில்லை

இதுகுறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறுகையில், ‘‘மரங்கள் நிறைந்த சோலையாக இருந்த அந்த படித்துறைகளில், கரையோர மக்கள் மட்டுமில்லாது சுற்றுவட்டார கிராம மக்கள் நீராடி வந்துள்ளனர். தற்போது வைகை ஆற்றில் அந்த படித்துறைகள் மண் மூடி இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது. வைகை அணையில் தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே வைகை ஆற்றில் நீரோட்டத்தைப் பார்க்க முடிகிறது. மற்ற நாட்களில் மழை நீர் அல்லது ஆற்றுவழித்தடத்தல் கிளை நதிகள் மூலம் வரக்கூடிய தண்ணீர் வர வேண்டும். ஆனால், இந்த இரண்டும் வராததால் பெரும்பாலும் வைகை வறண்டே காணப்படுகிறது. மதுரையில் ஆண்டு சராசரி மழையளவு 844 மி.மீ. தற்போது இந்த அளவுக்கு மழை பெய்வதில்லை. தமிழகத்தில் தற்போது கிடைக்கும் மொத்த நீர்வளத்தில் வைகையின் பங்கு வெறும் 6.7 சதவீதம் மட்டுமே. வைகை ஆறு வறண்டதால் மக்கள் ஆற்றில் நீராடுவதும் குறைந்தது. அதனால், இந்த தலைமுறையினருக்கு படித்துறையின் பராம்பரியமும், முக்கியத்துவம் தெரியவில்லை. கடந்த காலத்தில் ஆற்றின் படித்துறையின் பெயரைச் சொல்லி நாம் ஆற்றின் எந்த பக்கம் இருக்கின்றோம் என்ற தகவலை பிறருக்குச் சொல்லி அனுப்புவோம். ஆனால், படித்துறைகள் என்றால் என்ன என்று இந்த தலைமுறையினருக்கு சொல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE