ஆன்லைன் சூதாட்டத்தால் வீட்டை விற்றார்… நண்பரிடம் பல ஆயிரம் கடன் வாங்கினார்: மனமுடைந்த இளைஞர் எடுத்த துயர முடிவால் அதிர்ச்சி

By காமதேனு

ஆன்லைன் ரம்மியில் 18 லட்சம் பணத்தை இழந்த தருமபுரி இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த முத்தானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. தனியார் கிரானைட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இவர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது சொந்த ஊரான முத்தானூரில் வசித்து வந்தார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்ட பிரபு, தொடர்ச்சியாக விளையாடி அதில் பணத்தை இழந்துள்ளார். ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான அவருக்கு, கடன் சுமை அதிகரித்துள்ளது. இதையடுத்து தன்னுடைய வீட்டை விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல வேலைக்குச் சென்ற பிரபு, பணிசெய்யும் இடத்திலும் ஆன்லைன் ரம்மி விளையாடி இருக்கிறார்.

தன்னிடம் கடைசியாக இருந்த ரூ.5000 பணத்தை இழந்ததோடு மட்டுமில்லாமல், நண்பரின் ஏடிஎம் கார்டை பெற்று மேலும் 40 ஆயிரம் ரூபாய் இழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரின் மனைவியுடன் தகராறு ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டிற்குச் சென்ற அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபுவுக்கு லாட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. புகார் ஏதும் வராத நிலையில் அரூர் காவல் நிலையத்தில் இதுவரை வழக்குப் பதியப்படவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் தொடர்ச்சியாக பலர் உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE