விழுப்புரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி அரசு கட்டிடங்களில் செய்யப்பட்ட விளம்பரங்களை நேரில் வந்து ஆய்வு செய்ய தமிழக தலைமைச் செயலாளர், டி ஜிபி சைலேந்திரபாபு ஆகியோருக்கு பயணப்படியாக இளைஞர் ஒருவர் 500 ரூபாய் மணியாடர் அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே வளவனூர், குமாரகுப்பத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோருக்கு ரூ.500 மணியாடர் அனுப்பியுள்ளார்.
மேலும் அவர் அனுப்பிய கடிதத்தில், விழுப்புரத்தில் சட்டம் , ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி அரசு கட்டிடங்களில் உள்ள சுவர்களில் விளம்பர வாசகங்கள் எழுதுவது, விளம்பர பேனர்களை வைப்பது என விதி மீறல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. எனவே இவற்றை நேரில் வந்து பார்ப்பது பயணப்படியாக ரூ 500 அனுப்பியுள்ளேன். இத்தொகைக்கு சென்னையிலிருந்து விழுப்புரத்திற்கு வந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து செய்தியை சமூக வலைதளங்களில் வீடியோவாகவும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.