செஸ் தொடக்கவிழாவில் பங்கேற்கும் 4 பேருக்கு கரோனா... குரங்கம்மை கண்காணிப்பு தீவிரம்: மா.சுப்பிரமணியன் தகவல்!

By காமதேனு

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் அனைவருக்கும் கரோனா மற்றும் குரங்கம்மை தொற்று உள்ளதா எனக் கண்காணிக்கப்படுகிறது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று மாலை தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்பதற்காக 187 நாடுகளிலிருந்து 2000க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் சென்னைக்கு வந்திருக்கிறார்கள். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெறும் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்கிறார். அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கிறார். இதில் பங்கேற்க இருக்கும் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில், நடைபெறும் கலைவிழாவில் 900 பேர் பங்கேற்க இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான நான்கு பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும். அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. கரோனா தொற்று உள்ள நபர்களைத் தனிமைப்படுத்த அறிவுறுத்தியிருக்கிறோம். வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளிடமும் குரங்கம்மை பரிசோதனை செய்யப்படுகிறது. முழங்கைகளுக்குக் கீழே கொப்பளங்கள் இருக்கிறதா எனக் கண்காணிக்கப்படுகிறது. 90 சதவீதத்தினருக்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் சென்னை வந்திருக்கிறார்கள். யாருக்கும் அத்தகைய பாதிப்பு இல்லை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE