பத்து மணி நேரம் விசாரணை... படமெடுக்க போலீஸ் கெடுபிடி: இரவோடு இரவாக பள்ளி நிர்வாகிகள் சிறையில் அடைப்பு

By காமதேனு

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸாரால் விசாரணைக்காக ஒருநாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட சக்தி மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகிகள், விசாரணை முடிந்து நேற்று இரவே சிறையில் அடைக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியின் பனிரெண்டாம் வகுப்பு மாணவி கடந்த 13-ம் தேதியன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்தப் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியர் ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கிருத்திகா ஆகிய 5 பேர் கடந்த 17-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஐவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார், சிறையில் இருக்கும் பள்ளி நிர்வாகிகளை விசாரணை செய்ய அவர்களை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி புஷ்பராணி, அவர்களை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு அனுமதி வழங்கினார். விசாரணை முடிந்து இன்று பிற்பகல் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து விசாரணை அதிகாரி விஜயலட்சுமி தலைமையிலான போலீஸார், 5 பேரையும் அழைத்து சென்று தனித்தனியாக வைத்து விசாரணை நடத்தினர்.

சுமார் பத்து மணி நேர விசாரணைக்கு பின்னர், அவர்களை உடனடியாக இரவோடு இரவாக கொண்டு சென்று நீதிபதி புஷ்பராணி வீட்டில் அவரது முன்னிலையில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் அவர்கள் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

"நீதிமன்றத்திற்குள் நேற்று அழைத்து வரப்பட்ட 5 பேரை ஊடகத்துறையினர் படமெடுக்க விடாமல் கடும் கெடுபிடியுடன் நடந்துகொண்டதும், மாணவி இறப்பு விசாரணையில் தீவிரம் காட்டுவதற்கு மாறாக, காவல்துறை பள்ளியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது. இது சரியல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இவ்வழக்கில் மெத்தனமாக இருந்த அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கள்ளகுறிச்சியில் கூறியிருப்பதும், 72 மணி நேரம் போலீஸ் காவல் கேட்ட சிபிசிஐடி போலீஸார் 12 மணி நேரத்திற்குள் விசாரணையை முடித்துக்கொண்டது பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE