தபால் வாக்குகளால் 100% பதிவில் தொய்வா?: ஆசிரியர் சங்க மனுவிற்கு அதிரடி காட்டிய ஐகோர்ட்

By காமதேனு

நூறு சதவீத வாக்குப்பதிவுக்காக தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஊழியர்களை வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குகளை பதிவு செய்ய உத்தரவிடக்கோரிய மனுவை மதுரை உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்துள்ளது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தேனி மாவட்ட செயலாளர் பாண்டித்துரை, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், " தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவு என்பது தேர்தல் ஆணையத்தின் தாரக மந்திரமாக உள்ளது. நூறு சதவீத வாக்குப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தங்களின் வாக்குகளை தபால் வாக்குகளாகப் பதிவு செய்கின்றனர். இந்த வாக்குகள் பல நேரங்களில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. இருப்பினும் நூறு சதவீத வாக்குப்பதிவுக்கு தபால் வாக்குகளால் தொய்வு ஏற்படுகிறது.

இதனால் நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கத்தில் தேர்தல் பணிக்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குகளைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் குறிப்பிட்டுள்ள விவகாரம் குறித்து ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE