பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்தவும், சேவைகளை விரிவுப்படுத்தவும் ரூ.1.64 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
தொலைத்தொடர்பு துறையில் பிஎஸ்என்எல் நிறுவனம் மிக முக்கியமான அரசின் நிறுவனமாகும். தற்போதைய தனியார் நிறுவனங்களில் கடும் போட்டி காரணமாக அந்த நிறுவனம் நொடித்துபோன நிலையில் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில்தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்தவும், சேவைகளை விரிவுப்படுத்தவும் ரூ.1.64 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்த தொகையின் ஒரு பகுதியை முதலீடாக பிஎஸ்என்எல்க்கு மத்திய அரசு வழங்கும். இதனைப் பயன்படுத்தி பிஎஸ்என்எல் நிறுவனம் தனது நிதி நிலைமையை மேம்படுத்திக்கொள்ளும். மற்றொரு பகுதி நிதியின் மூலமாக இந்நிறுவனம் தனது சேவையை விரிவுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக இணையசேவை வழங்கவும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான தகவல்களை வெளியிட்ட மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் பிபிஎன்எல் நிறுவனத்தை இணைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.