என்னது எங்கள் வீட்டு மின் கட்டணம் ரூ.3,400 கோடியா? - அதிர்ச்சியில் மருத்துவமனையில் சேர்ந்த குடும்பம்!

By காமதேனு

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் பகுதியை சேர்ந்த தந்தையும் மகளும், தங்கள் வீட்டுக்கு 3,400 கோடி ரூபாய் மின்கட்டணம் என பில் வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 20 அன்று உங்கள் வீட்டுக்கு ரூ.34,19,53,25,293 மின்கட்டணம் என செல்போனுக்கு மெசேஜ் வந்ததால் குவாலியரின் ஷிவ் விஹார் காலனியில் சேர்ந்த பிரியங்கா குப்தாவும் அவரது தந்தை ராஜேந்திர பிரசாத் குப்தாவும் அதிர்ச்சியில் மூர்ச்சையாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மின்சார பில் காரணமாக தனது மாமனாரின் இரத்த அழுத்தம் அதிகரித்து மருத்துவமனையில் உள்ள பிரியங்கா குப்தாவின் கணவர் சஞ்சீவ் கன்கனே கூறினார்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக மத்தியப் பிரதேச மத்திய க்ஷேத்ரா வித்யுத் வித்ரன் மின் நிறுவனத்தின் போர்டல் மூலம் இந்த மெசேஜ் சரிபார்க்கப்பட்டது. அப்போதுதான் மின்துறை ஊழியர் ஒருவர் கணினியில் மின்சார பயன்பாட்டு அளவுக்கு பதிலாக மின் நுகர்வோர் எண்ணை குறிப்பிட்டது தெரியவந்தது. இதனால் மின் கட்டணம் தாறுமாறாக காண்பித்துள்ளது.

இது குறித்து பேசிய மத்திய பிரதேச மாநில எரிசக்தித் துறை அமைச்சர் பிரத்யுமன் சிங் தோமர், “ அந்த குடும்பத்திற்கு சென்ற பில் தவறுதலாக அனுப்பப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர்களுக்கு புதிய பில் உருவாக்கப்பட்டது. இப்போது அந்த வீட்டுக்கான மின்கட்டணம் ரூ.1,300 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின்சாரத் துறை ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட ஜூனியர் இன்ஜினியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE