`கருணாநிதியின் காப்பீடு திட்டத்தை திமுக அரசு நிராகரிக்கலாமா?'- திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருக்கும் விவசாயிகள்

By காமதேனு

குருவைப் பயிருக்கு காப்பீடு செய்ய தமிழக அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழக காவிரி விவசாய சங்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்து பேசுகையில், "தமிழகத்தில் இரண்டாவது ஆண்டாக குருவைக்கு காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வரும் ஜூலை 30க்குள் பிரிமியம் செலுத்துவதற்கான இறுதிக்கெடு முடிவடையவுள்ள நிலையில் விவசாயிகள் காப்பீடு செய்ய முடியாமல் பரிதவிக்கிறார்கள். முன் பட்ட குருவை அறுவடைக்கு தயாராகயிருந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் விவசாயிகள் கவலையில் உள்ளார்கள்.

தற்போது 5 லட்சம் ஏக்கரில் காவிரி டெல்டாவில் மட்டும் குருவை சாகுபடி செய்து வருகிறார்கள். பருவம் மாறி பெய்யும் பெரும் மழையால் குருவை அழிந்து போகுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். குருவை காப்பீடு செய்ய இரண்டாவது ஆண்டாக இதுவரையிலும் தமிழக அரசு அறிவிப்புகளை வெளியிடவில்லை.

பிரீமியம் செலுத்துவதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் நிலுவையில் உள்ள நிலையில், இது குறித்து தமிழக முதல்வர் உடனடியாக காப்பீடு செய்வதற்கான அனுமதியையும், உரிய கால நீட்டிப்பும் வழங்கி பிரீமியம் செலுத்த அனுமதிக்க வேண்டும்.

காப்பீடு திட்டம் என்பது கலைஞரால் 1989-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதனை திமுக தலைமையிலான அரசு இரண்டாவது ஆண்டாக தொடர்ந்து நிராகரிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

காப்பீட்டுக்கு அனுமதிக்க வலியுறுத்தி முதல்வருக்கு கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியர் மூலமாக அனுப்பி வைத்துவிட்டு, காப்பீடுக்கான அனுமதி கிடைக்கிற வகையிலும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என அமர்ந்திருக்கிறோம்" என்றார்.

போராட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனியப்பன், திருவாரூர் மாவட்ட தலைவர் சரவணன், மாநிலத் துணைச் செயலாளர் செந்தில்குமார் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE