அதிக வட்டி ஆசை... மக்களின் பணம் 8 கோடி மோசடி: சிக்கிய நிதி நிறுவன இயக்குநர்

By ரஜினி

சென்னையில் 1896-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த நிதி நிறுவனம் 8 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அளித்த புகாரின் பேரில் அந்த நிறுவனத்தின் இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை புரசைவாக்கம் நாகப்பன் தெருவில் உள்ள தி புரசைவாக்கம் தனவர்தன சாசுவத நிதி லிமிடெட் என்ற பெயரில் 1896-ம் ஆண்டு முதல் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. வங்கிகளில் அளிக்கப்படும் வட்டியை விட இந்த நிறுவனத்தில் 3 மடங்கு வட்டி அதிகமாக அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை நம்பி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் பணத்தை இந்நிறுவனத்தில் செலுத்தி அதற்கான வட்டியும் பெற்று வந்தனர். இதனிடையே, கடந்த 8 மாதங்களாக பொதுமக்களிடம் பெற்ற பணத்திற்கு நிதி நிறுவனம் முறையாக வட்டியும், செலுத்திய பணத்தையும் திரும்பத்தராமலும் பல்வேறு காரணங்களைக் கூறி காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நிதி நிறுவனத்தார் செலுத்திய பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றுவதாக 75க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவில் தொடர்ச்சியாக புகார்கள் அளித்து வந்தனர். அதனடிப்படையில் மோசடி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, நேற்று அந்த நிதி நிறுவனம் மற்றும் காந்தி அவென்யூவில் அமைந்துள்ள நிறுவனத்தின் உரிமையாளர் ஈஸ்வரப்பன் இல்லத்தில் டி.எஸ்.பி மகேந்திரன் தலைமையிலான பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அந்நிறுவனத்தில் சோதனை நடத்திய பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார், பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து நிறுவனத்திற்கு சீல் வைத்து சென்றனர்.

மேலும் நிறுவன நிர்வாகி ஈஸ்வரப்பன் என்பவரை பிடித்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கரோனா காலத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இதுவரை 8 கோடி ரூபாய் வரை உரிமையாளர் ஈஸ்வரப்பன் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஈஸ்வரப்பனை கைது செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வீடு விற்ற பணம், குழந்தைகளின் படிப்புக்காக சேர்த்து வைத்த பணம் என லட்சக்கணக்கில் பணத்தை இந்த நிதி நிறுவனத்தில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு செலுத்தியதாகவும், தற்போது செலுத்திய பணத்தையும் திரும்பப் பெறமுடியாமல் அல்லாடி வருவதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE