பிரதமருக்கு 7 அடுக்கு பாதுகாப்பு... சமூக வலைதளங்கள் கண்காணிப்பு: சென்னை போலீஸ் அலர்ட்!

By காமதேனு

பிரதமர் மோடி சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிடுவோர், சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் கண்காணித்து கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறினார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நாளை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை சென்னை வருவதையொட்டி நேரு விளையாட்டு அரங்கம், அண்ணா பல்கலைக்கழகம், உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்..

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் போலீஸ் பாதுகாப்பு ஏழு மடங்கு அதிகரிக்கப்படும். பிரதமர் வரும் அனைத்து இடங்களிலும் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் வருகையை ஒட்டி 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஏற்கெனவே ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இரண்டு அடுக்கு உயர்த்தி 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேரு உள்விளையாட்டு அரங்கில் மட்டும் 5 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றனர். விமான நிலையம், கிண்டி ராஜ்பவன், அண்ணா பல்கலைக்கழகம், ஐஎன்எஸ் அடையார் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் 15 நிமிடங்களில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. மேலும் ராட்சத பலூன்கள், ட்ரோன் கேமராக்கள், பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை ஈடுபடுவார்கள்.

மேலும் லாட்ஜ், தங்கும் விடுதிகள், நட்சத்திர விடுதிகளில் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நேரு விளையாட்டரங்கம் அருகில் உள்ள சாலைகளில் சில போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்படும். பிரதமர் வருகையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 54 ரவுடிகளை கைது செய்துள்ளோம். பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் காவல்துறை சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகையை ஒட்டி எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டு இருந்தாலோ, சமூக வலைதளங்களில் பதிவு செய்தாலோ அவர்களை கண்காணித்து உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE