முதலீட்டாளர்களிடம் இருந்து பணம் பெற்று நாடெங்கும் சொத்துக்கள் வாங்கியிருக்கும் பிஏசிஎல் நிறுவனத்திற்குச் சொந்தமான சொத்துக்களைப் பதிவு செய்யக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதைமீறி விற்பனைப் பத்திரம் பதிவு செய்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு சார்-பதிவாளர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
வாடிக்கையாளர்களிடம் ஆசைவார்த்தைகளை வாக்குறுதிகளாகக் கொடுத்து, அதிக முதலீட்டைப் பெற்று நாடெங்கும் அசையாச் சொத்துகள் வாங்கிக் குவித்ததாகவும், முதலீட்டாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததாகவும் பிஏசிஎல் மீது குற்றச்சாட்டுக் கிளம்பியது. இந்த நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்ததோடு, நிறுவனத்தில் அசையாச் சொத்துக்கள் குறித்து மதிப்பீடு செய்யவும், கண்காணிக்கவும் நீதிபதி லோதாவை கண்காணிப்பாளராக நியமித்திருந்தது.
நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டி, பிஏசிஎல்லின் அசையாச் சொத்துக்களை மதிப்பீடு செய்துவரும் நிலையில், அந்நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்வது தொடர்பாக எவ்வித பத்திரப்பதிவும் செய்யக்கூடாது என நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், நீதிபதி லோதா குழுவிடம் இருந்து தடையில்லாச் சான்று வாங்கியதாக போலியான ஆவணம்பெற்று, தென்காசி மாவட்டத்தில் பல சொத்துகள் விற்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை மண்டல துணை பதிவுத்துறைத் தலைவர் கவிதா ராணிக்கு புகார் சென்றது. அவர் இதுதொடர்பில் ஆய்வு மேற்கொண்டார். இதில் பிஏசிஎல் நிறுவனச் சொத்துக்களை நீதிமன்ற உத்தரவை மீறி பதிவு செய்திருந்த செங்கோட்டை சார்-பதிவாளர் மாரியப்பன், வாசுதேவநல்லூர் சார்-பதிவாளர் கோமதி, ஊத்துமலை சார்-பதிவாளர் ஆனந்தி, சுரண்டை சார்-பதிவாளர் சரவணன் ஆகியோர் இன்று மாலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை நெல்லை மண்டல துணைப் பதிவுத்துறைத் தலைவர் கவிதா ராணி பிறப்பித்தார்.