தலையணையுடன் உடலுறவு, சக மாணவிகள் பற்றி ஆபாச அவதூறு: மருத்துவக் கல்லூரியில் வக்கிர ‘ராகிங்’ கொடுமை

By காமதேனு

மத்திய பிரதேச மாநிலத்தின் அரசு மருத்துவக் கல்லூரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கு சீனியர் மாணவர்கள் இழைத்திருக்கும் ‘ராகிங்’ கொடுமை அம்பலமாகியிருக்கிறது. வக்கிரமான செயல்களைச் செய்யச் சொல்லி அவர்கள் வற்புறுத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி (எம்ஜிஎம்), அம்மாநிலத்தின் மிகப் பெரிய மருத்துவக் கல்லூரி ஆகும். இங்கு முதலாமாண்டு மருத்துவம் படிக்கும் மாணவர்கள் சிலர், சமீபத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் (யுஜிசி), ராகிங் தடுப்பு உதவி மையத்துக்கும் அழைத்து, சீனியர் மாணவர்கள் தங்களை மிக மோசமான முறையில் ராகிங் செய்வதாகப் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, மருத்துவக் கல்லூரியைத் தொடர்புகொண்ட பல்கலைக்கழக மானியக் குழு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. ராகிங்கில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸில் புகார் தெரிவிக்கவும், இதில் ஈடுபட்டவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யவும் கல்லூரியின் ‘ராகிங் எதிர்ப்புக் குழு’ முடிவுசெய்திருக்கிறது. முதலாமாண்டு மாணவர்களின் புகார்கள் பதிவுசெய்யப்படும் என இந்தூர் காவல் துறை தெரிவித்திருக்கிறது.

வக்கிரமான ராகிங்

பல்கலைக்கழக மானியக் குழுவின் ராகிங் தடுப்பு உதவி மையத்திடம் ஒரு மாணவர் தெரிவித்த புகார் அனைவரையும் அதிரவைத்திருக்கிறது. சீனியர் மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகளுக்கு வரவழைக்கப்பட்ட முதலமாண்டு மாணவர்கள் தலையணையுடன் உடலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றனர். சக மாணவிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களைப் பற்றி ஆபாசமாகப் பேசவும் சீனியர் மாணவர்கள் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள்.

முதலாமாண்டு மாணவர்களின் செல்போன்களைப் பிடுங்கிவைத்துக்கொண்ட சீனியர் மாணவர்கள், அவர்களை பஸ்கி எடுக்குமாறு வற்புறுத்தியதுடன், ஒருவரையொருவர் ஓங்கி அறைந்துகொள்ளுமாறும் துன்புறுத்தியிருக்கின்றனர்.

கண்டுகொள்ளாத பேராசிரியர்கள்

இதுதொடர்பாக, சில பேராசிரியர்களிடம் புகார் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என மாணவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ராகிங் கொடுமை தொடர்பான வாட்ஸ்-அப் உரையாடக்கள், ஆடியோ, வீடியோ பதிவுகள் எனப் பல ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் யூஜிசி தெரிவித்திருக்கிறது.

புகாரளித்த மாணவர்கள், சீனியர் மாணவர்கள் பழிவாங்கும் செயலில் ஈடுபடுவார்கள் எனும் அச்சத்தில் தங்களைப் பற்றிய விவரங்களை வெளியிட மறுத்துவிட்டனர். இந்தச் செயல்களில் ஈடுபட்ட சீனியர் மாணவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. முதலாமாண்டு மாணவர்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் சீனியர் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தூர் காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE