டாஸ்மாக் பாராக செயல்பட்ட பேருந்து நிறுத்தம்; வீடியோவை பதிவிட்ட பொதுமக்கள்: ஒரு மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்!

By ரஜினி

சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை கெலட் உயர்நிலைப்பள்ளி அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. இப்பகுதியில் உள்ள மது அருந்துபவர்கள் சிலர் பேருந்து நிறுத்ததை டாஸ்மாக் பார் போல் பயன்படுத்தி வந்தனர். இதனால் பெரும் அவதிக்குள்ளான பொதுமக்கள் இது குறித்து சமூக வலைதளத்தில் வீடியோவுடன் புகார் அளித்தனர்.

குறிப்பாக டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கிவிட்டு சிலர் பேருந்து நிலையத்தில் அமர்ந்து மது அருந்துவதாகவும், இதனால் பஸ் ஸ்டாண்ட்டுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சிறார்கள் சிரமத்திற்குள்ளாவதாகவும் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று சென்னை காவல்துறையின் சமூக வலைதளப் பக்கத்தை டேக் செய்து பொதுமக்கள் சிலர் புகார் அளித்தனர்.

பொதுமக்கள் புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் திருவல்லிக்கேணி போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், பேருந்து நிலையத்தில் குடிபோதையில் இருந்தவர்களை எச்சரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் அப்பகுதியில் குவிந்திருந்த மது பாட்டில்கள் மற்றும் குப்பைகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு சுத்தப்படுத்தினர்.

போலீஸாரின் நடவடிக்கைக்குப் பின் பேருந்து நிறுத்தம்.

போலீஸார் மேற்கொண்ட இந்த நடவடிக்கையை புகைப்படமாக எடுத்து புகார் அளித்த நபருக்கு சென்னை காவல்துறை சமூக வலைதளப் பக்கம் மூலம் பதில் அளித்துள்ளனர். காவல்துறையின் இந்த துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE