விழுப்புரம் தனியார் கல்லூரி மாணவி மாடியிலிருந்து விழுந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது தற்கொலை முயற்சியா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மணி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் ரம்யா (18) இவர் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பார்மஸி கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.பார்ம் படித்து வருகிறார். இவரது தந்தை வெளிநாட்டில் இருப்பதால், தற்போது தாயுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு வந்தவர் முதல் பீரியட் வகுப்பை முடித்துக்கொண்டு கழிவறைக்கு சென்றுள்ளார். சற்று நேரத்தில் கழிவறைக்கு சென்ற மற்ற மாணவிகள், கீழே ரம்யா விழுந்து கிடப்பதை அறிந்தனர். இதனை அறிந்த கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள்,மாணவர்கள் அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். கீழே விழுந்ததில் அவரின் இடுப்புக்கு கீழே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது அவர் சுயநினைவு இல்லாமல் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதற்கிடையே எஸ்பி ஸ்ரீநாதா, டி எஸ்பி பார்த்திபன் மற்றும் விக்கிரவாண்டி போலீஸார் கல்லூரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அவரின் உடையில் இருந்த கடிதம் ஒன்றையும், புகைப்படம் ஒன்றையும் கண்டெடுத்தனர். மேலும் கழிவறை அருகே இருந்த குப்பை தொட்டியில் கசக்கி வீசப்பட்ட கடிதம் ஒன்றையும் கண்டறிந்துள்ளனர்.
அந்த கடிதத்தில், எல்லோருடைய வாழ்க்கையிலும் யாராவது வந்தால் எல்லாம் மாறலாம் என எழுதி அந்த கடிதத்துடன் மாணவி குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து மாணவி ரம்யாவுடையதுதானா? அப்படி என்றால் அவர் எழுதி வைத்துள்ள வாசகத்திற்கு என்ன அர்த்தம் என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு போலீஸார் விடை தேடிக் கொண்டிருக்கின்றனர்.
மாணவி தற்போது சுயநினைவு இன்றி இருப்பதால் அவர் கண் விழித்த பிறகே மற்ற விஷயங்கள் குறித்து தெரிய வரும் என்பதால் மாணவி கண் விழிப்பிற்காக போலீஸார் காத்திருக்கின்றனர். இந்நிலையில் திண்டிவனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மாலதி மாணவி ரம்யாவிடம் வாக்குமூலம் பெற வந்தவர், அவர் சுயநினைவு இல்லாமல் இருப்பதால் திரும்பி சென்றார்.
இது குறித்து விசாரணை நடத்த ஏ .எஸ்.பி அபிஷேக் குப்தா, டி . எஸ்.பி பார்த்திபன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆட்சியர் (பொறுப்பு) பரமேஸ்வரி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மாணவி ரம்யா தவறி விழுந்தாரா? தற்கொலை செய்து கொள்ள குதித்தாரா? யாராவது தள்ளிவிட்டார்களா? எப்படி கீழே விழுந்தார் என்ற கேள்விக்கு அவர் சுயநினைவு வந்தபின் கூறினால்தான் தெரியவரும். அண்மையில் கனியாமூர் மாணவி ஸ்ரீமதி மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்த செய்தி பரபரப்பு அடங்குவதற்குள் விக்கிரவாண்டி தனியார் கல்லுாரி மாணவி ரம்யா மாடியிலிருந்து விழுந்த சம்பவம் பரபரப்புக்கு காரணமானது.