‘நீட் தேர்வு தோல்வியால் ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டார்’- மீண்டும் உளறிய திண்டுக்கல் சீனிவாசன்!

By காமதேனு

மின் கட்டண உயர்வைக் கண்டித்து திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சீனிவாசன், "மாணவி ஸ்ரீமதி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்டதாக" தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய அவர், "நிர்வாகிகளை நீக்குவதும், பின்னர் சேர்ப்பதும் போன்ற அறிக்கையை தினந்தோறும் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டு வருகிறார். ஆனால், அதைப்பற்றி அதிமுக தொண்டர்களுக்கோ, நிர்வாகிகளுக்கோ கவலை இல்லை. அவருக்கு கொடுத்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது, இந்த செயலில் ஈடுபட்ட நபர் மறுநாளே விபத்தில் சிக்கியதாக செய்தி வந்தது. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பதற்கு இது உதாரணம். மேலும், இதன் மூலம் அதிமுகவுக்கு யார் தீங்கு நினைத்தாலும் அவர்களுக்கு எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மா தண்டனை வழங்கும். திமுக ஆட்சியில் சாமானிய மக்கள் மின்சாரத்தை பயன்படுத்த முடியாத அளவுக்கு கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள். இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வில் தோல்வி அடைந்த ஸ்ரீமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்" என்றார். அதன்பின்பு சுதாரித்துக்கொண்ட சீனிவாசன், "நான் மாற்றி கூறி விட்டேன், அவர் நீட் தேர்வால் உயிரிழக்கவில்லை" என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE