குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விடைபெற்றுக்கொண்ட ராம்நாத் கோவிந்த் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹ்பூபா முஃப்தி.
நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவுற்றதையடுத்து, ராஜஸ்தான் முன்னாள் ஆளுநரும் பழங்குடியினத் தலைவருமான திரெளபதி முர்மு புதிய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக இன்று காலை அவர் பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், இன்று காலை இதுதொடர்பாக ட்வீட் செய்த மெஹ்பூபா முஃப்தி, ‘பதவிக்காலம் முடிந்து வெளியேறும் குடியரசுத் தலைவர் (ராம்நாத் கோவிந்த்), எண்ணற்ற முறை இந்திய அரசமைப்புச் சட்டம் காலில் போட்டு மிதிக்கப்பட்ட மரபை விட்டுவிட்டுச் செல்கிறார். 370-வது சட்டக்கூறு ஒழித்துக்கட்டப்பட்டதாகட்டும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாகட்டும் அல்லது சிறுபான்மையினரும் பட்டியலினச் சமூகத்தினரும் கூச்சநாச்சமின்றி குறிவைக்கப்பட்டதாகட்டும், அரசமைப்புச் சட்டத்தைக் காவு கொடுத்து பாஜகவின் அரசியல் திட்டங்களை அவர் நிறைவேற்றினார்’ எனக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி அதில் விமர்சித்திருக்கிறார்.
முன்னதாக, சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘ஹர் கர் திரங்கா’ எனும் பெயரில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்றுமாறு மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் பிரச்சாரம் குறித்து நேற்று மெஹ்பூபா விமர்சித்திருந்தார். தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தேசியக் கொடி பிரச்சாரத்துக்காக அங்குள்ள கடைக்காரர்களிடம் கட்டாய வசூல் நடத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரத்துக்காக ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் தலா 20 ரூபாய் வசூலிக்குமாறு அம்மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அதிகாரி முகமது ஷெரீஃப் உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த உத்தரவு, பின்னர் திரும்பப் பெறப்பட்டது. எனினும், பல பள்ளிகளில் அந்தத் தொகை வசூலிக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, “தேசியக் கொடி ஏற்றுவதற்காகப் பணம் தருமாறு மாணவர்கள், கடைக்காரர்கள், அரசு ஊழியர்களை காஷ்மீர் நிர்வாகம் கட்டாயப்படுத்துவதைப் பார்க்கும்போது, ஏதோ காஷ்மீர் ஒரு பகை பிரதேசம் போலவும், அதைக் கைப்பற்றியே ஆக வேண்டும் என்றும் அரசு நிர்வாகம் கருதுவதுபோல தெரிகிறது. தேசபக்தி என்பது இயல்பாக வருவது. அதைத் திணிக்க முடியாது” என்று மெஹ்பூபா கண்டனம் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ட்வீட்டும் செய்திருந்தார்.
இந்நிலையில், தேசியக் கொடி பிரச்சாரத்துக்காகப் பள்ளி மாணவர்களிடமிருந்து பணம் வசூலிக்குமாறு காஷ்மீரின் பட்காம் மாவட்ட கல்வி அதிகாரி அனுப்பிய சுற்றறிக்கையை மெஹ்பூபா இன்று ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.
இதற்கிடையே, இன்று (ஜூலை 25) ஸ்ரீநகரின் லால் செளக் பகுதியில், 300-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் கலந்துகொள்ளும் தேசியக் கொடி பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்தப் பேரணியைத் தொடங்கிவைப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. லால் செளக் பகுதியிலிருந்து கார்கில் நினைவிடத்துக்கு இரு சக்கர வாகனங்களில் பாஜகவினர் ஊர்வலமாகச் செல்லவிருக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பள்ளி ஒன்றுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக ஒருவர் எழுதிய ட்வீட்டையும், மெஹ்பூபா ரீ-ட்வீட் செய்திருக்கிறார்.