கொடைக்கானலில் உள்ள பிரபல தூண் பாறையை மறைத்து மதில் சுவர் ஒன்று கட்டப்பட்டு வருவதற்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
கொடைக்கானலில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் பல்வேறு சுற்றுலாத்தலங்கள் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் இவற்றைக் கண்டு ரசிப்பதற்கு வனத்துறையினர் தனித்தனியே கட்டணம் வசூலித்து வருகின்றனர். இவற்றில் மிகவும் அழகி மற்றும் பிரபலமான சுற்றுலாத்தலமானது தூண் பாறை (பில்லர் ராக்).
இதனைப் பல நேரங்களில் மேக மூட்டம் மூடி மறைத்து விடும். வழக்கமாக சாலையில் செல்லும் பொழுதே தூண் பாறை தெரிகிறதா இல்லையா என்று சுற்றுலாப் பயணிகள் பார்க்கும் வகையில் வேலி அமைக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த வேலியை அகற்றிய வனத்துறையினர் பிரம்மாண்டமான மதில் சுவரை எழுப்பி வருகின்றனர். இந்த மதில் சுவர் எழுப்பி முடிக்கப்பட்டால் தூண் பாறையை சாலையில் இருந்து காண முடியாத நிலை ஏற்படும்.
மேலும், கட்டாயம் கட்டணம் செலுத்திய பின்னர் தான் இந்த பெரிய மதில் சுவரைத் தாண்டி உள்ளே சென்று தூண் பாறை தெரிகிறதா இல்லையா என்பதை காண முடியும். கட்டணம் செலுத்தியவர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் தூண் பாறை மேகமூட்டம் இல்லாமல் இருக்கும், இல்லாவிட்டால் தூண்பாறையைக் காண முடியாத நிலை ஏற்படும்.
எனவே, இந்த பிரம்மாண்ட மதில் சுவரை அகற்ற வேண்டும், இல்லையெனில் குறைவான உயரத்தில் மதில் சுவரை அமைக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பிரம்மாண்ட மதில் சுவரை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்த இருப்பதாகவும் இயற்கை ஆர்வலர்களும், பல்வேறு அமைப்பினரும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள கொடைக்கானல் வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் திலீப், "இந்த மதில் சுவர் கொடைக்கானல் இயற்கை அழகினை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுவரில், இயற்கைக் காட்சிகளை மிகத் திறமையான ஓவியர்களைக் கொண்டு ஓவியம் தீட்டுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காகத்தான் இந்த மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மதில் சுவர் பணி முடிவடைந்ததும் இதன் அழகினை அனைவரும் பாராட்டுவார்கள்" என்றார்.