விழுப்புரத்தில் இரண்டு சொகுசுப் பேருந்துகள் நள்ளிரவில் நேருக்கு மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். மற்ற பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
புதுச்சேரியில் இருந்து சொகுசுப் பேருந்து ஒன்று 50 பயணிகளுடன் பெங்களூரு சென்று கொண்டிருந்தது. இதேபோல் திருவண்ணாமலையில் இருந்து அனுமதி பெறாமல் மற்றொரு சொகுசுப் பேருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்துகள் நள்ளிரவு நேரத்தில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே வந்தபோது நேருக்கு நேர் மோதியது. இதில் ஒரு பேருந்தின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது. பேருந்தில் இருந்த பயணிகள் அலறித் துடித்தனர். இதில் 8 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். மற்ற பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த பயணிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் சிதறிக்கிடந்த பேருந்துகளின் கண்ணாடி துகள்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். அனுமதியில்லாமல் பேருந்தை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் தப்பிவிட்டார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.