வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு: அவசரக்கார கொள்ளையர்களால் டாக்டர் தம்பதிக்கு அடித்தது அதிர்ஷ்டம்!

By காமதேனு

வேலூரில் அரசு மருத்துவத் தம்பதிகள் சுற்றுலா சென்றிருப்பதை அறிந்த மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து கொள்ளயடித்தனர். இதில் கொள்ளையடித்தப் பணத்தில் பாதி அவர்கள் தப்பிச்செல்லும்போது வீட்டிலேயே விழுந்திருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் சகுந்தலா தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரும், இவரது மனைவி சுப்ரியாவும் அரசு மருத்துவர்களாக உள்ளனர். மேலும் இருவரும் சேர்ந்து வேலப்பாடி தனியாக க்ளீனிக் நடத்தி வருகிறார்கள். மணிகண்டன், சுப்ரியா தம்பதியினர் வீட்டை பூட்டிவிட்டு கேரளத்திற்கு சுற்றுலா சென்றிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் மர்மநபர்கள் மணிகண்டன் வீட்டிற்குள் நுழைந்தனர்.

வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த பத்து பவுன்நகைகள் மற்றும் பத்துலட்ச ரூபாயை எடுத்துச் சென்றனர். பணத்தை ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்து திருடர்கள் எடுத்துச் சென்றனர். அதில் ஒரு கவர் வீட்டிலேயே விழுந்துகிடந்தது. இதனால் அதிர்ஷ்டவசமாக 5 லட்ச ரூபாய் தப்பியது.

வீட்டின் உரிமையாளர்கள் கேரளத்திற்கு சுற்றுலா சென்றிருப்பதால் இன்று காலையில் வீட்டு வேலைக்குச் சென்ற வேலைக்காரப் பெண் வெளிப்புறமாக பூட்டியிருக்கும் வீட்டைத் திறக்க சாவியோடு சென்றார். ஆனால் கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக மருத்துவர் மணிகண்டனுக்கு வேலைக்காரப் பெண் தகவல் கொடுத்தார். அத்துடன் போலீஸிற்கும் தகவல் கொடுத்தார். மோப்ப நாயும் அழைத்து வரப்பட்டது. அது வேலப்பாடி பேருந்து நிலையம் வரை ஓடிச் சென்று நின்றது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

எதிர்வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது மர்மநபர்கள் இருவர் வீட்டுக்குள் நுழையும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதுகுறித்துப் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE