கேரளத்தைத் தொடர்ந்து டெல்லியிலும் நுழைந்தது குரங்கு அம்மை!

By காமதேனு

இந்தியாவில் குரங்கு அம்மை நோய்க்கு கேரளத்தில் மூன்றுபேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெல்லியில் இன்று ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் இதுவரை குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவருமே வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பியவர்கள் தான். ஆனால் இப்போது டெல்லியில் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டிருப்பவர் எந்த வெளிநாட்டிற்கும் செல்லாதவர் என்பது அதிர்ச்சியளித்துள்ளது.

31 வயதான அந்த நபர், வெளிநாட்டுக்கு செல்லாத நிலையில், நோய் தொற்றியது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சிறப்புக்கவனம் செலுத்தி கவனித்து வருகிறது. குரங்கு அம்மை நோய் உறுதிசெய்யப்பட்டிருக்கும் அந்த நபர். டெல்லியில் உள்ள மெளலானா ஆசாத் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு லேசான காய்ச்சலும், உடலில் ஆங்காங்கே புண்களும் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

குரங்கு அம்மை நோய்க்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போதைய சூழலில் பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியே செலுத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல், உடலில் புண்கள் ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE