ஆம்னி பேருந்துகளில் வெளிமாவட்டங்களில் இருந்து பார்சல் வருவது போல் அரசு விரைவுப்பேருந்துகளிலும் கீழ் பகுதியில் பார்சல்கள் இனி அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டண விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நம் தமிழகத்தைப் பொறுத்தவரை அதிகளவில் பொருள்களை ஏற்றியும், எடுத்தும் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு கொண்டுசெல்வோர் லாரிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இதுபோக தனியார் பார்சல் சர்வீஸ்களும் உள்ளன. இதேபோல் தனியார் ஆம்னி பேருந்துகளிலும் பயணிகளின் இருக்கையின் கீழ்பகுதியில் பொருள்களை பார்சல் செய்து அனுப்புவதற்கென்றே பிரத்யேக கேபினும் உண்டு. அதேநேரம் 80 கிலோவரையில் மட்டுமே அனுப்புவோருக்கு குறைவான கட்டணத்தில் பார்சல் அனுப்பும் வசதியை அறிவித்துள்ளது அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்.
அதன்படி தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து பிறமாவட்டங்களுக்கும் பார்சல் அனுப்பும் கட்டண விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது 80 கிலோ எடைக்கான கட்டணம் ஆகும். அதன்படி திருச்சி தினசரி 210 ரூபாய், மதுரை தினசரி 300 ரூபாய், கோவை தினசரி 330 ரூபாய், சேலம் தினசரி 210 ரூபாய். திருநெல்வேலி தினசரி 390 ரூபாய், தூத்துக்குடி தினசரி 390 ரூபாய், செங்கோட்டை தினசரி 390 ரூபாய், நாகர்கோவில் தினசரி 420 ரூபாய், கன்னியாகுமரி தினசரி 450 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாதாந்திர கட்டண விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி பார்சல் அனுப்புவோர் அந்த பேக்கேஜ் எடுத்துக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழகத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகப் பேருந்துகள் ஓடும் அனைத்து ஊர்களில் இருந்தும் சென்னைக்கு 80 கிலோ எடை கொண்ட பார்சலுக்கான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவையைப் பயன்படுத்த விரும்புவோர் தங்களுக்கு அருகில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களை பயன்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.