அதிகாலையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு: வீட்டில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் பலி

By காமதேனு

இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் 2 பாலஸ்தீன பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலுக்கு, பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பு நிர்வகிக்கும் மேற்குக்கரையின் நப்லஸ் நகரில் இன்று அதிகாலை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஒரு கும்பல், இஸ்ரேல் பாதுகாப்பு படை மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை பதிலடி கொடுத்தது. இதையடுத்து இருதரப்பிலும் துப்பாக்கிச்சூடும், குண்டு வீச்சு தாக்குதலும் நடைபெற்றது. இதில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் அபுத் சோபா(29), முஹம்மது அல்-அஜிஸி(22) ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் பாலஸ்தீனத்தின் பக்தா அல்-அக்சா மார்டர்ஸ் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலையொட்டி நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ஒரு வீட்டில் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இது குறித்து இஸ்ரேல் எல்லைக் காவல்துறை செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், "துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. எங்கள் படைக்கு எந்த உயிரிழப்பும் இல்லை. இந்த சோதனையின் போது யாரும் கைது செய்யப்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE