மேகாலயாவில் விபசார விடுதியில் இருந்து சிறுமிகளை மீட்ட போலீஸார், அங்கிருந்த 68 ஆண், பெண்களை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவரை தேடி வருகின்றனர்.
மேகாலயாவின் மேற்கு கரோ ஹில்ஸ் பகுதியில் பாஜக மாநிலத்துணைத்தலைவர் பெர்னார்ட் என் மராக்கிற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் கட்டிடத்தை நேற்று போலீசார் திடீர் சோதனை செய்தனர். அப்போது 30 சிறிய அறைகளைக் கொண்ட பண்ணை வீட்டில் சோதனையிட்ட போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அங்கு அறைகளில் பதுங்கிருந்த பெண்கள், ஆண்கள் என 68 பேர் இருந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். மேலும் இந்த விபசார விடுதியின் மேலாளர், பராமரிப்பாளர் மற்றும் மூன்று ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்த சிங் ரத்தோர் கூறுகையில், " மேற்கு காரோ ஹில்ஸ் பகுதியில் பண்ணை வீடு விபசார விடுதியாகப் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பாஜக மாநில துணைத்தலைவர் பெர்னார்ட் என்மராக் வீடு சோதனை செய்யப்பட்டது. இங்கு சுகாதாரமற்ற அறைக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த நான்கு சிறுவர்கள், இரண்டு சிறுமிகளை மீட்டுள்ளோம்.
இந்த சோதனையில் 27 வாகனங்கள், எட்டு இருசக்கர வாகனங்கள், சுமார் 400 மதுபாட்டில்கள், 500-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்படாத ஆணுறைகள், வில் மற்றும் அம்புகள், 67 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இங்கு கைப்பற்றப்பட்ட பொருட்களிலிருந்து இது விபசார விடுதியாக பயன்படுத்தப்பட்டது தெளிவாகத் தெரிகிறது" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், " விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும், உடனடியாக ஷில்லாங் சதார் காவல் நிலையத்தில் சரணடையுமாறும் முதன்மைக் குற்றவாளியான மாராக்கிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அவர் ஒத்துழைக்கவில்லை. இதனால் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்றார். இந்த சம்பவம் மேகாலயாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.