“காவல் துறை உங்கள் நண்பன்” என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால், இது பேச்சுவழக்கில் மட்டுமே இருக்கிறது. காரணம், பெரும்பாலான காவலர்கள் பொது இடங்களில் நடந்துகொள்ளும் விதம். என்றாலும் அத்திப் பூத்தாற்போல காக்கிச் சட்டைக்குள்ளும் மனிதநேயமிக்க நல்ல மனிதர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு உதாரணம் தலைமைக் காவலர் சுபாஷ் ஸ்ரீனிவாசன்.
சிவகங்கை மாவட்டம் சாலைகிராமத்தை பூர்விகமாகக் கொண்ட சுபாஷ் ஸ்ரீனிவாசன், சிறுவயது முதலே பொதுநலன் சார்ந்து சிந்திப்பவராக வளர்ந்தார். 1997-ல் தனது 20-வது வயதில் காவல் துறையில் சேர்ந்த இவர், இப்போது ராமநாதபுரம் மாவட்ட போக்குவரத்துக் காவலில் தலைமைக் காவலர். போக்குவரத்துக் காவல் பணியில் பொதுத் தொண்டு செய்ய நிறையவே வாய்ப்புக் கிடைக்கும். அதனால் தான் திருவாடானையில் புலனாய்வுப் பிரிவில் இருந்த சுபாஷ் ஸ்ரீனிவாசன், போக்குவரத்துக் காவல் பணியை தாமாக விரும்பிக் கேட்டு வாங்கி வந்திருக்கிறார்.
இதற்கு முன்பு சிவகங்கை மாவட்டத்தில் பணியில் இருந்தார் சுபாஷ். அப்போது, விளம்பரப் பலகைகளுக்காக சாலை ஓரத்து பச்சை மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகள் இவரது நெஞ்சில் முள்ளாய்க் குத்தின. உடனே, யாருக்காகவும் எதிர்பார்த்துக் காத்திருக்காமல் தானே களத்தில் இறங்கி அந்த ஆணிகளை அகற்ற ஆரம்பித்தார். இதைப் பார்த்துவிட்டு தொண்டுள்ளம் கொண்ட மற்றவர்களும் அவருக்கு தோள்கொடுக்க முன் வந்தார்கள்.
அடுத்து நடந்தவற்றை அவரே நம்மிடம் விவரிக்கிறார். "வள்ளலார் குறித்து படிக்கும்போதெல்லாம் மண்ணின் வளம் காக்கும் மரங்களைப் பாதுகாக்கணும்கிற எண்ணம் எனக்குள்ளே எழுந்துட்டே இருக்கும். பச்சை மரத்துல ஆணி அடிச்சா அதோட பட்டை பலவீனமடைஞ்சு நாளடைவுல மரம் பட்டுப்போறதுக்கான வாய்ப்பு இருக்கு. அதனால ஆயுதப் படையில சேர்ந்ததுல இருந்தே பச்சை மரத்து ஆணிகளை அகற்றும் என்னோட சேவையைத் தொடங்கிட்டேன்.
ராமநாதபுரத்துக்கு வந்த பின்னாடியும் ஆணி அகற்றும் வேலையை நான் நிறுத்தல. அப்படி இதுவரைக்கும் நான் அகற்றுன ஆணிகள் மட்டுமே 150 கிலோ கிட்ட இருக்கும். என்னோட இந்த சேவையை அங்கீகரிக்கும் விதமா 2019 சுதந்திர தின விழாவுல, சிறந்த சமூக சேவகர் விருதை வழங்கினார் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர். இதுக்கு என்னைய சிபாரிசு செஞ்சதே எங்க எஸ்.பி தான். இந்த விருது மட்டுமில்லாம இதுவரைக்கும் இருபத்தஞ்சுக்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கிருக்கேன். சாதனையாளர்கள் சம்பந்தப்பட்ட புத்தகங்கள்லயும் என்னோட பேரு பதிவாகி இருக்கு.
தேவிபட்டினத்துல பணியில் இருந்தப்ப அங்கருக்கிற சிவன் கோயிலைச் சுத்தி சுத்தம் பண்ணி 42 தென்னை மரங்களை நட்டேன். இப்போ அந்த மரமெல்லாம் காய்ச்சுப் பலன்குடுக்குது. சமீபத்துல திருவண்ணாமலைக்குப் போயிருந்தேன். அங்கயும் கிரிவலப் பாதையில இருக்கிற பச்சை மரங்கள்ல ஆணிகளை அடிச்சுக் காயப்படுத்தி இருந்தாங்க. ஒரு வாரம் அங்கயே தங்கி இருந்து 12 கிலோ அளவுக்கு ஆணிகளைப் பிடுங்கி அகற்றினேன்” என்று சொன்னார் சுபாஷ்.
தான் மட்டுமல்லாது மற்றவர்களும் பச்சை மரங்களில் ஆணி அடிப்பதை தவிர்க்க வேண்டும்; ஏற்கெனவே அடிக்கப்பட்ட ஆணிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருக்கும் சுபாஷ் இதை, சிக்னலில் நிற்கும் மாணவர்களிடமும் மற்றவர்களிடமும் பிட் நோட்டீஸ் வாயிலாக வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார். சமயம் கிடைக்கும் போதெல்லாம் கையில் இருக்கும் மெகாஃபோன் வழியாகவும், மரங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து பிரச்சாரம் செய்கிறார்.
சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதும் சுபாஷ் சீனிவாசனின் இன்னொரு முக்கியமான சேவை. இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், "ராமநாதபுரம் கலெக்டரேட்டுக்கு பக்கத்துல இருக்கிற கண்மாய்ல 3 ஏக்கர் அளவுக்கு சீமைக் கருவேல மரங்கள் மண்டிக் கிடந்துச்சு. அதையெல்லாம் அகற்றி சுத்தப்படுத்தி என்னோட சொந்த முயற்சியில 400 மரக்கன்றுகளை நட்டு வச்சேன். அடுத்து வர்ற சந்ததிக்கும் மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு இருக்கணும் கிறதுக்காக அந்த 400 கன்றுகளையும் சின்னப் பசங்கள வெச்சு நட்டேன்.
கரோனா காலத்துல எல்லாரும் மாஸ்க் பயன்படுத்திட்டு கண்டபடி வீசிட்டுப் போனாங்க. அதுவே பெரும் சுகாதாரச் சீர்கேடா இருந்ததால நானே களத்துல இறங்கி 20 ஆயிரம் மாஸ்க்குகளை சேகரிச்சு கொளுத்தினேன். ஒரு முறை, ஒரு அம்மாவும் மகளும் கிணற்றில் தவறி விழுந்துட்டாங்க. ஒற்றை ஆளா கிணத்துல இறங்கி அவங்கள காப்பாத்துனேன். அதுக்காக தமிழக அரசு எனக்கு விருதோட ஒரு லட்ச ரூபாய் பரிசும் குடுத்தாங்க. அந்த சமயத்துல என் மகனுக்கு டெங்கு காய்ச்சல். அவனோட சிகிச்சைக்காக 50 ஆயிரத்தை செலவு செஞ்சிட்டு மீதிப் பணத்தை 12 விதவைகளுக்கு பகிர்ந்து குடுத்தேன்.
கலெக்டரேட்டுக்குப் பக்கத்துல ஊராட்சிக்குச் சொந்தமான பழைய கட்டிடம் ஒண்ணு இருந்துச்சு. அந்தப் பகுதியில இருக்கிற பசங்க படிக்கிறதுக்காக அதை சின்னதா ஒரு நூலகமா மாத்திக் குடுத்தேன். இப்ப 100 புத்தகங்கள் அந்த பசுமை நூலகத்துல இருக்கு. மனநலம் பாதிச்சவங்களுக்கு முடிவெட்டி விடுறது... ஆதரவற்றோர் இறந்தா அவங்கள எடுத்து அடக்கம் பண்றதுன்னு என்னோட சேவைகளை இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம்” என்றார் புன் சிரிப்புடன்.
இதற்கெல்லாம் நிறையச் செலவுபிடிக்குமே... என்ன செய்வீர்கள்? என்று கேட்டதற்கு, "இதுக்காகவே என்னோட சம்பளத்துல மாசம் 10 ஆயிரத்தை எடுத்து வெச்சிருவேன். எங்க வீட்டுல இருக்கிறவங்களுக்கு இதுல விருப்பம் இருக்கோ இல்லையோ... ஆனா, நான் விடாம என்னாலான இந்த சேவைகளைச் செஞ்சுட்டு வர்றேன். மத்தவங்களப் போல பெருசா சொத்துச் சேர்த்துச் சொகுசா வாழணும்கிற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. இருக்கிறவரைக்கும் நாலு பேத்துக்கு நல்லது செஞ்சிட்டு போகணும்; அவ்வளவுதான். ஓய்வுக்குப் பின்னால முழுக்க முழுக்க மரக் கன்றுகள் நடும் வேலையை மட்டுமே செய்யுறதா இருக்கேன். முடிஞ்சா, ரிட்டையர்மென்ட் பணத்துல சின்னதா ஒரு காட்டை உருவாக்கிடணும்கிறதுதான் எனக்குள்ள இப்ப இருக்கிற ஆசை” என்றார் சுபாஷ் ஸ்ரீனிவாசன்
போலீஸ் என்றாலே பொல்லாதவர்களாய் தான் இருப்பார்கள் என்று பொதுப்புத்தியில் பதிவாகி இருக்கும் இலக்கணத்தை உடைக்கும் விதமாக இப்படியும் சிலர் போலீசில் இருக்கவே செய்கிறார்கள்!