தொலைக்காட்சி விவாதங்களில் தகுந்த ஆதாரமின்றி நடத்தப்படும் ஊடக விசாரணைகளும், சமூக ஊடகங்களும் நாட்டின் ஜனநாயகத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்துகின்றன என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள சட்டத் துறைக்கான ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய பல்கலைக்கழகத்தில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.பி.சின்ஹா நினைவாக இன்று நடந்த விழாவில் உரையாற்றிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதித் துறை, ஊடகத் துறை, தனது வாழ்க்கைப் பின்னணி ஆகியவை தொடர்பாகப் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். அப்போது, செய்தி ஊடகங்களில் நடத்தப்படும் விவாதங்களை - ‘கங்காரு கோர்ட்ஸ்’ (Kangaroo courts) எனும் பதத்தைப் பயன்படுத்தி அவர் விமர்சித்தார். மின்னணு ஊடகங்களும் சமூக ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஜனநாயகத்துக்குப் பின்னடைவு
நிகழ்ச்சியில் பேசிய என்.வி.ரமணா, “ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் பாரபட்சமான கருத்துகள், மக்களைப் பாதிப்பதுடன், ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்து நாட்டின் அமைப்புக்குக் குந்தகம் விளைவிக்கின்றன. இதன் விளைவாக, நீதி வழங்கப்படுவது கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் பொறுப்புணர்வை மீறி எல்லை கடந்து செயல்படுவதன் மூலம், ஜனநாயகத்தை இரண்டு படிகள் பின்னோக்கிச் செல்ல வைத்துவிடுகிறீர்கள்” என்று குற்றம்சாட்டினார்.
“நீதித் துறை ஆய்வு இல்லாவிட்டால், நமது அரசமைப்புச் சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துவிடும். அரசமைப்புச் சட்டம் என்பது மக்களுக்கானது. அரசமைப்புச் சட்டம் சுவாசிப்பதற்கான உடல் உறுப்பாக நீதித் துறை இருக்கிறது” என்றும் அவர் கூறினார்.
“நீதி வழங்குவது என்பது எளிதான கடமை அல்ல. கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் அது பெரும் சவாலாக மாறிவருகிறது” என்று தெரிவித்த என்.வி.ரமணா, “அரசியல் தலைவர்கள், அரசு உயரதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் போன்றோருக்கு அவர்களின் பணிகளின் தன்மையைக் கருதி, அவர்கள் ஓய்வுபெற்ற பின்னரும் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆனால், நீதிபதிகளுக்கு அப்படியான பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை” என்றும் தெரிவித்தார். நீதிபதிகள் நேரடியாகத் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நீதிபதிகளுக்கு எதிராக சமூகவலைதளங்களில் ஒருங்கிணைந்த பரப்புரைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறிய அவர், “நீதிபதிகள் உடனடியாக எதிர்வினையாற்றாமல் இருக்கலாம். ஆனால், அதை பலவீனம் என்றோ கையறு நிலை என்றோ தவறாக எண்ணிவிட வேண்டாம்” என்றும் எச்சரித்தார்.
பொறுப்புணர்வு அவசியம்
அச்சு ஊடகங்கள் இன்றும் குறிப்பிட்ட அளவுக்குப் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவே செய்கின்றன எனக் கூறிய தலைமை நீதிபதி, “மின்னணு ஊடகங்கள் சுத்தமாகப் பொறுப்புணர்வின்றி நடந்துகொள்கின்றன. சமூக ஊடகங்கள் இன்னும் மோசம்” என்று கூறினார்.
அனுபவம் வாய்ந்த நீதிபதிகளே தீர்மானிக்க முடியாத கடினமான பிரச்சினைகள் குறித்து ஊடகங்கள் ‘கங்காரு நீதிமன்றங்களை’ நடத்துகின்றன என்றும் அவர் விமர்சித்தார். (சட்டம் அல்லது நீதியின் அங்கீகரித்திரும் தர நிர்ணயத்தைப் புறக்கணித்து நடத்தப்படும் விவாதங்கள், விசாரணைகள் ‘கங்காரு நீதிமன்றங்கள்’ எனக் குறிப்பிடப்படுகின்றன. இதுபோன்ற விவாதங்கள் சான்றுகள், உண்மைகள், தரவுகள் என எல்லாவற்றையும் கங்காரு போல தாண்டி முன்முடிவுடனான தீர்மானத்துக்கு வித்திடும் என்பதால், ‘கங்காரு நீதிமன்றங்கள்’ எனப் பொதுவாகக் குறிப்பிடப்படுகின்றன.)
ஊடகங்கள் தங்களைத் தாங்களே முறைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட என்.வி.ரமணா, “மின்னணு ஊடகங்களும், சமூக ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மின்னணு ஊடகங்கள் மக்களுக்குத் தகவல்களை வழங்கவும், தேசத்துக்கு உற்சாகம் ஊட்டவும் தங்கள் குரலைப் பயன்படுத்த வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.
சமீபத்தில் ஒரு முன்னணி ஆங்கில செய்தி சேனலில் நடந்த விவாதத்தின்போது, முகமது நபி குறித்து பாஜகவின் செய்தித்தொடர்பாளர் நுபுர் ஷர்மா தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பின. நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் பதிவிட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த தையல் கலைஞர் கன்னையா லால் அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த உமேஷ் கோஹ்லே கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் அவர் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருந்தது காரணமாகச் சொல்லப்பட்டது. நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிப்பவர்களுக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகின்றன.
இந்தச் சூழலில், ஊடகங்கள் குறித்து தலைமை நீதிபதி பகிரங்கமாக விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.