'நாயைக் குளிப்பாட்டுவது என் வேலை அல்ல’; மறுத்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்: எஸ்.பியின் உத்தரவுக்கு ஷாக் கொடுத்த ஐ.ஜி!

By என்.சுவாமிநாதன்

தன் வீட்டு நாயை குளிப்பாட்டி வரச் சொன்னதற்கு, அது என் வேலை அல்ல என மறுத்த காவலரை எஸ்.பி சஸ்பெண்ட் செய்த சம்பவம் கேரளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள காவல்துறையில் தகவல் தொடர்பியல் எஸ்.பியாக இருப்பவர் நவ்னீத் சர்மா. இவருக்குப் பாதுகாப்பு காவலராக இருப்பவர் ஆகாஷ். எஸ்.பி நவ்னீத் சர்மாவின் மனைவி ரயில்வே துறையில் வேலை செய்துவருகிறார். இதனால் ரயில்வே குடியிருப்பிலும் இவர்களது வீடு உள்ளது. இந்த வீட்டில் வட இந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் வேலை செய்து வந்தார். இவர் எஸ்.பி நவ்னீத் சர்மாவின் கன்மேனான ஆகாஷ்க்கு திடீர் என போன் செய்து வீட்டுக்கு வருமாறு கூறினார்.

ஆகாஷ் ரயில்வே குடியிருப்பில் இருக்கும் எஸ்.பியின் வீட்டுக்குச் சென்றதும், வீட்டை முழுமையாக சுத்தம் செய்து, எஸ்.பியின் நாயைக் குளிப்பாட்டவும் எஸ்.பி சொல்லச் சொன்னார் என அந்த வீட்டில் வேலைசெய்யும் உதவியாளர் சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவலர் ஆகாஷ், ' எனக்கு எஸ்.பியின் பாதுகாப்பு காவலராக நிற்பது மட்டுமே வேலை. நாயைக் குளிப்பாட்டுவது அல்ல' எனச் சொல்லியிருக்கிறார். இதுகுறித்து எஸ்.பி நவ்னீத் சர்மாவுக்குத் தெரியவர, இந்த கோபத்தில் தன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து டிவி பார்த்துக்கொண்டே தன் வீட்டில் இருந்த எலெக்ட்ரானிக் பொருள்களை சேதப்படுத்தியதாக சொல்லி ஆகாஷை பணியிடை நீக்கம் செய்தார்.

இந்தக் கடிதம் கைக்கு கிடைத்ததும் முதல்வர் அலுவலகத்தில் வேலைசெய்யும் தன் உறவினர் கவனத்திற்கு கொண்டுசென்றார் ஆகாஷ். முதல்வர் அலுவலக அறிவுறுத்தலின்பேரில் இவ்விஷயம் குறித்து விசாரணை நடத்திய கேரள காவல்துறையின் தகவல் தொடர்பியல் ஐ.ஜி அனூப் குருவிலா ஜான், ஆகாஷின் பணியிடை நீக்கத்தை ரத்துசெய்து உத்தரவிட்டார். அதனோடு எஸ்.பி நவ்னீத் சர்மாவின் பாதுகாப்பு காவலராக இருந்த ஆகாஷை, திருவனந்தபுரம் மாநகரக் காவல்துறைக்கு மாற்றியும் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE