கண்ணீர், கதறல்களுக்கு மத்தியில் 11 நாட்களுக்குப் பின் கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் ஒப்படைப்பு

By காமதேனு

உயர் நீதிமன்றத்தின் கண்டிப்பான உத்தரவைத் தொடர்ந்து இன்று காலை ஏழு மணி அளவில் மாணவியின் உடலை பெற்றுக் கொண்ட அவரது பெற்றோர் தங்கள் சொந்த ஊரான பெரிய நெசலூருக்கு உடலை எடுத்துச் சென்றனர்.

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த 13-ம் தேதியன்று பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் கடந்த 17-ம் தேதி பெரிய கலவரமாக வெடித்து பள்ளியில் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. காவல்துறை வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் மாணவியின் தந்தை ராமலிங்கம் தனது மகள் சாவுக்கு நீதி கேட்டும், அவரது உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் மறு பிரேத பரிசோதனை செய்வதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த மறு பிரேத பரிசோதனையில் தங்கள் தரப்பு மருத்துவர், வழக்கறிஞர், மற்றும் மாணவியின் தந்தை ஆகியோர் உடன் இருக்க வேண்டும் என்று கோரப்பட்டது. மருத்துவரை அனுமதிக்க மறுத்த உயர்நீதிமன்றம், தானாகவே ஒரு மருத்துவ குழுவை அமைத்து உத்தரவிட்டது. தந்தையும் வழக்கறிஞரும் இருக்கலாம் என்று சொன்னது.

ஆனால் அதை ஏற்காத மாணவியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் இதே கோரிக்கையோடு முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றமும் மாணவியின் உடலை மறுபரிசோதனை செய்யலாம் என்று உத்தரவிட்டது. அதனையடுத்து கடந்த 20 ம் தேதியன்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உயர் நீதிமன்றம் நியமித்த மருத்துவ குழுவினர் மறு பிரேத பரிசோதனை செய்தனர்.

மறு பிரேத பரிசோதனையில் மாணவியின் தரப்பில் யாரும் கலந்து கொள்ளாத நிலையில் பிரேத பரிசோதனை முடிந்த மறுநாள் 21-ம் தேதியன்று மாணவியின் உடலை மாணவியின் பெற்றோர் பெற்றுக் கொள்ள உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் முறையிட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மாணவியின் உடலை இன்று காலை 11 மணிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் இல்லையெனில் காவல் துறையில் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கண்டிப்பாக உத்தரவிட்டது.

அதனையடுத்து இன்று காலை மானவியின் உடலை பெற்றுக் பெற்றுக்கொண்டு உடலை அடக்கம் செய்து விடுவதாக மாணவியின் பெற்றோர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை மருத்துவமனைக்கு வந்த பெற்றோர், மாணவி உடலைப் பெற்றுக்கொண்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து விருத்தாசலம் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தை நோக்கி எடுத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், மாவட்ட ஆட்சியர் ஷரவன் குமார் ஜடாவத் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அத்துடன் அஞ்சலி செலுத்தியதோடு மட்டுமல்லாமல் மாணவியின் உடலோடு அமைச்சர் கணேசன் பெரிய நெசலூருக்கு சென்றார். அவருடன் 50-க்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்களில் 3 ஐஜிக்கள் தலைமையில் காவல்துறையினர் உடன் சென்றனர்.
மாணவியின் சொந்த ஊரில் சுமார் 750 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு அவரது உறவினர்கள் மற்றும் உள்ளூர்காரர்கள் மட்டும் மாணவிக்கு அஞ்சலி செலுத்த போலீஸார் அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இறுதிச்சடங்கிற்குப் பிறகு மாணவியின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE