காவல்துறை எச்சரிக்கை... இரவோடு இரவாக பொருட்களை வீசிச் சென்ற மக்கள்: பள்ளி முன் குவிந்து கிடக்கும் மேஜைகள்

By காமதேனு

சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற கலவரத்தின்போது அங்கிருந்த பொருட்களை தூக்கிச் சென்றவர்கள் நேற்று இரவு அவற்றை தாங்களாகவே கொண்டு வந்து பள்ளியின் எதிரே உள்ள சாலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போட்டு விட்டு சென்றிருக்கின்றனர்.

கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இந்த சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் நடந்த 17-ம் தேதி வன்முறையாக வெடித்தது. பள்ளிக்கு எதிரே திரண்டவர்கள் அந்த பள்ளியை அடித்து நொறுக்கினர்.

பள்ளியின் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பள்ளியின் உடைமைகளும் எரித்து நாசமாக்கப்பட்டன. பள்ளியில் இருந்த நாற்காலி, மேஜை, பெஞ்சுகள், ஏர் கூலர் உள்ளிட்ட பல பொருட்களை வன்முறையாளர்கள் தூக்கிச் சென்றனர். இரு சக்கர வாகனங்களிலும், தலையிலும் அவர்கள் பொருட்களை அள்ளி சென்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ஒவ்வொருவராக தேடித்தேடி கைது செய்யப்பட்டு வருகிறார்கள். நேற்று வரை 350-க்கும் ஏற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அடுத்ததாக பொருட்களை சூறையாடி சென்றவர்கள் குறி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த பொருட்களை திரும்பவும் பள்ளிக்கு எடுத்து வந்து ஒப்படைக்க வேண்டும், மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனியாமூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று முன்தினம் தண்டோரா மூலம் எச்சரித்தது காவல்துறை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பொருட்களை எடுத்துச் சென்றவர்கள், இரவில் யாரும் பார்க்காத நேரத்தில் தாங்கள் எடுத்துச் சென்ற பொருட்களை கொண்டு வந்து பள்ளிக்கு முன்பாக உள்ள சாலையில் போட்டு விட்டு சென்றுள்ளனர். இதனால் அந்த பொருட்கள் அங்கு மலைபோல குவிந்து கிடக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE