டிஎஸ்பி வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி: சிபிஐ விசாரணை வளையத்தில் பொன் மாணிக்கவேல்!

By காமதேனு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பியாக பணிபுரிந்த காதர்பாஷா என்பவர் சர்வதேச கடத்தல் கும்பலோடு கூட்டு சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கோரி காதர்பாஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், பழவலூர் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டு சேர்ந்து அதிகார ரீதியில் தன்னை பழிவாங்கும் நோக்கிலும் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ததாகவும், ஜாமீனில் விடுதலையான தன்னை மற்றொரு பொய் வழக்கில் சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

உயர் நீதிமன்றத்தையும், சிறப்பு நீதிமன்றத்தையும் தவறாக பயன்படுத்திய பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்துறை செயலாளருக்கும், டி.ஜி.பி.க்கும் மனு அளித்ததாகவும், இதுவரை நடவடிக்கை எடுக்காததால் தன் புகாரின் அடிப்படையில் பொன் மாணிக்கவேல் மீது சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ஓய்வுபெற்ற முன்னாள் ஜஜி பொன் மாணிக்கவேல் மீதான புகார் மீது சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார். டிஐஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE