செஸ் ஒலிம்பியாட் போட்டி பாதுகாப்புக்கு செல்லும் 4,000 காவலர்களுக்கு தினப்படி ரெடி!

By ரஜினி

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு 4,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு தினப்படி வழங்க 1.70 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28-ம் தேதி மகாபலிபுரத்தில் தொடங்க உள்ளது. அடுத்த மாதம் 10-ம் தேதி வரை நடைபெற உள்ள இப்போட்டியில் உலகம் முழுவதும் 190 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்கள் தங்குவதற்காக சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 37 நட்சத்திர விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஓ.எம்.ஆர் மற்றும் ஈ.சி.ஆர் சாலை வழியாக மாமல்லபுரம் செல்ல உள்ள நிலையில், அந்த சாலைகளில் முழுமையான பாதுகாப்பு பணிகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து 4 ஆயிரம் போலீஸார் வரவழைக்கப்பட்டு 17 நாட்கள் அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குறிப்பாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

காவல் ஆய்வாளர்கள், இரண்டாம் நிலை காவலர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதால் அவர்களுக்கு தினப்படியாக 2.4 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டுமென்று டிஜிபி, அரசிடம் கேட்டு கொண்டதன் பேரில் நாளொன்று நபர் ஒருவருக்கு 250 ரூபாய் வீதம் தினப்படி வழங்க 1.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தினப்படிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூலம் காவலர்களுக்கு வழங்க வேண்டுமென்றும், காவலர்கள் பணிக்கான சான்றிதழ்களை 17 நாட்களுக்கு பின் வழங்க வேண்டும் என்றும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE