நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஆட்டுக்கொட்டையில் பாய்ந்த மின்சாரத்தால் மனைவியும் அவரை காப்பாற்ற சென்ற கணவனும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பாண்டமங்கலம் 12-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் பரமசிவம்(63). இவரது மனைவி பழனியம்மாள் (57). இவர்கள் இருவரும் விவசாயக் கூலி வேலை செய்து வந்தனர். அத்துடன் தங்கள் வாழ்வாதாரத்துக்காக சொந்தமாக ஆடுகளும் வளர்த்து வந்தனர். இதற்காக வீட்டுக்கருகே தனியே கொட்டகை போட்டு ஆடுகளைப் பராமரித்து வந்தனர்.
அந்த கொட்டகைக்கு வீட்டிலிருந்து வயர் மூலம் மின்சார வசதி செய்துள்ளனர். இன்று அதிகாலை பழனியம்மாள் வழக்கம்போல் இருந்து ஆடுகளைப் பார்ப்பதற்காக ஆட்டுக் கொட்டகைக்கு சென்றார். அப்போது கொட்டகைக்குச் சென்ற வயரிலிருந்து மின்சாரம் கசிந்து பழனியம்மாள் மீது பாய்ந்தது. அதனால் அலறல் சத்தத்துடன் கீழே விழுந்துள்ளார்.
மனைவியின் அலறல் சத்தம் கேட்டு பதைபதைத்து ஓடி வந்த பரமசிவம், கீழே விழுந்து கிடந்த மனைவியை ஓடிச்சென்று தூக்க முற்பட்டார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. அதனால் அவரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்த கணேசன் என்பவர் ஓடி வந்தார்.
அவர்கள் இருவரும் கீழே விழுந்து கிடப்பதை பார்த்ததும் அவர்களை மீட்க முற்பட்டார். அதனால் அவரையும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். மின்சாரம் தாக்கிய பரமசிவம், பழனியம்மாள் தம்பதியினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட கணேசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்திவேலூர் போலீஸார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.