பிரபல கட்டுமான நிறுவனத்தில் மூன்றாவது நாளாக ரெய்டு: கோடிக்கணக்கில் பணம், ஆவணங்கள் சிக்கின

By காமதேனு

மதுரை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் மூன்றாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையில், பல கோடி ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மதுரையில் பிரபல கட்டுமான நிறுவனங்களான ஜெயபாரத் நிறுவனத்தின் ஜெயபாரத் மற்றும் கிளாட்வே கிரீன் சிட்டி, அன்னை பாரத், கிளாட்வே சிட்டி போன்ற நிறுவனங்களுடைய உரிமையாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் மூன்றாவது நாளாக இன்றும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மாலை நேரப்படி கட்டுமான நிறுவன பங்குதாரரான முருகன் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று இரவு முதல் அரசு தங்க நகை மதிப்பீட்டாளர்கள் குழுவைக் கொண்டு தங்கத்தின் மதிப்பு கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது, மூன்றாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனையில் இன்று அதிகாலையில் பல கோடி பணம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவை இரண்டு கார்களில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மதுரை மண்டல வருமான வரித்துறை புலானாய்வு ஆணையர் செந்தில்வேல் தலைமையில் டெல்லி, ஹைதராபாத், சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்த 36-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் முறைப்படுத்தப்பட்ட நிலையில் சோதனை தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே போன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோசுக்குறிச்சியில் இயங்கி வரும் ஆர்.ஆர். கன்ஸ்ட்ரக் ஷன் எனும் தனியார் நிறுவனத்தின் அலுவலகத்திலும் வருமானவரித்துறையினர் மூன்றாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மொத்தமாக திண்டுக்கல் மற்றும் மதுரையைச் சேர்த்து 20 இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை மூன்றாவது நாளாக தொடர்ந்து வருகிறது. மேலும், சிக்கிய பணம், ஆவணங்கள் குறித்து வருமானவரித்துறையினர் சோதனை முடிவடைந்த பின்பே அதிகாரப்பூர்வமான முழுமையான தகவல் தெரியவரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE