சின்னசேலம் அருகே பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மாணவியின் உடலை அவரது பெற்றோர்கள் பெற்றுக் கொள்ள உத்தரவிடக் கோரி காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்திருக்கிறது சென்னை உயர்நீதி மன்றம்.
உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட படி மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை நடந்து முடிந்துள்ள நிலையில் மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக்கொள்ள உத்தரவிடக் கோரி காவல்துறையின் சார்பில் இன்று முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக காலையில் உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
அதன்படி இன்று மாலை அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில், 'மாணவியின் தந்தை தரப்பு மனுவை உச்சநீதிமன்றத்தில் வாபஸ் பெற்றுவிட்டனர். எனவே உடலை பெற்று கொள்ள சொல்லுங்கள்' என்று வாதிடப்பட்டது. ஆனால் எங்களது மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யவில்லை, உயர் நீதிமன்றத்தை நாடச்சொல்லி அறிவுறுத்தியுள்ளது என்று மாணவியின் தந்தை தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ``நாளை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தாக்கல் செய்யுங்கள். காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்து கொள்கிறோம், ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில் எவ்வித மாற்றமும் செய்ய மாட்டேன்'' என்று கூறினார். மாணவியின் பெற்றோர் உடலை பெற்றுக் கொண்டு தகனம் செய்ய உத்தரவு பிறப்பிக்க, தமிழக அரசு வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையையும் உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.