திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்... மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி: சத்துணவு சாப்பிட்டதால் விபரீதம்

By காமதேனு

நாகர்கோவில் கவிமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று மதியம் சத்துணவு சாப்பிட்ட மாணவிகள் 26 பேர் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இன்று மாலை பள்ளிவிடும் நேரத்தில் அதிகளவிலான மாணவிகள் வாந்தி, மயக்கம் அடைந்தனர். அவர்களில் அதிக பாதிப்புள்ள 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகர்கோவிலில் கவிமணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. கவிஞர் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பயின்ற, பயிற்றுவித்த பெருமையும் இந்தப் பள்ளிக்கூடத்திற்கு உண்டு. இங்கு நூற்றுக்கணக்கான மாணவிகள் தினமும் சத்துணவு சாப்பிடுவது வழக்கம். இன்று மதியம் மாணவிகளுக்கு சாதம், சாம்பார், முட்டை ஆகியவை சத்துணவாக வழங்கப்பட்டன. மதிய உணவு இடைவேளைக்குப் பின்பு வழக்கம்போல் வகுப்புகள் இயங்கின. இந்நிலையில் வெவ்வேறு வகுப்புகளைச் சேர்ந்த மாணவிகள் திடீரென வாந்தி எடுக்க ஆரம்பித்தனர். சிலர் மயங்கியும் விழுந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அரசுப்பள்ளி மாணவிகள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ், ஆட்சியர் அரவிந்த் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “மொத்தம் 27 மாணவிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஆகிய அறிகுறிகள் இருந்தன. பள்ளி நிர்வாகம் இதுகுறித்து விசாரித்து வருகிறது. உணவுப் பாதுகாப்புத்துறை மூலமும் விசாரணை நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE