'என் மருமகனை மன்னித்து விட்டேன்; அவரை விடுதலை செய்யுங்கள்': உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட மாமியார்!

By காமதேனு

அரிவாள் மனையால் வெட்டிய மருமகனுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்ட வழக்கில் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாமியார் வேண்டுகோள் விடுத்தார்.

சேலம் ஆத்தூரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணி. இவருக்குத் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2017 டிசம்பர் 28-ம் தேதி இவர் வாங்கிய கடனைத் திரும்ப செலுத்துவதில் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சுப்பிரமணி வீட்டில் இருந்து அரிவாள்மனையை எடுத்து தனது மாமியாரின் முதுகில் வெட்டியுள்ளார். இதையடுத்து, மாமியார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுப்பிரமணி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சேலம் மகளிர் நீதிமன்றம் சுப்பிரமணிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கடந்த மே 25-ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்பிரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்பிரமணி சார்பில் வழக்கறிஞர் பாயிண்ட் பாலாஜி ஆஜராகி, மனுதாரரும் அவரது மாமியாரும் சமாதானமாகியுள்ளனர். எனவே, மனுதாரரை விடுதலை செய்ய வேண்டும். மாமியாரும், மனுதாரரின் மனைவியும் குழந்தைகளும் வந்துள்ளனர் என்றார்.

அப்போது, நீதிமன்றத்தில் மனுதாரரின் மாமியார், மனைவி மற்றும் 3 குழந்தைகள் ஆஜராகினர். தனது மகள் மருமகனுடன் வாழ வேண்டும். குழந்தைகளை வளர்க்க வேண்டும். எங்களுக்குள் சமாதானம் ஆகிவிட்டது. மருமகனை மன்னித்து விட்டேன். அவரை விடுதலை செய்யுங்கள் என்று மாமியார் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் கூறுகையில், “ கணவனுக்கும், மனைவிக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உயர் நீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்று ஜோஷி என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் உயர் நீதிமன்றம் குடும்ப பிரச்சினையில் அதிகாரத்தைப் பயன்படுத்தலாம். இந்த வழக்கில் கொலை முயற்சி மற்றும் கொடுங்காயம் விளைவித்தல் பிரிவில் மனுதாரருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் குற்றம் நடந்துள்ளது. கணவனுக்கும், மனைவிக்கும் இடையே இருந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, உயர் நீதிமன்றத்திற்கு தரப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி மனுதாரரை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE