கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டாட்சியர் ராஜசேகரன் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத் துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் சின்னதாராபுரம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பவர், தனது தந்தை இறந்த நிலையில் அதற்காக வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்திருந்தார்.
அவரிடம் விசாரணையில் ஈடுபட்ட வட்டாட்சியர் ராஜசேகரன் வாரிசு சான்றிதழ் தர வேண்டுமானால் அதற்காக பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டாராம். ஆனால் லஞ்சம் கொடுக்க பழனிசாமி விரும்பவில்லை. அதனால் கரூர் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
அவர்களின் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவப்பட்ட பத்தாயிரம் ரூபாய்க்கான நோட்டுகளை எடுத்துக் கொண்டு போய் இன்று வட்டாட்சியர் ராஜசேகரனிடம் நேரில் சென்று பழனிசாமி கொடுத்தார். அதனை பெறும் போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக ராஜசேகரனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.