பழநியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வாட்ஸ்அப் குழு அமைத்து கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், கனியாமூர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி இறப்பிற்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்து கலவரமாக மாறியது. இந்த கலவரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி பலரையும் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் டீக்கடை உரிமையாளர் கோகுல் (23). இந்த இளைஞர் வாட்ஸ்அப் குழு அமைத்து கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோகுலை இன்று கைது செய்த பழநி நகர காவல்துறையினர் நீதிமன்ற காவலில் பழநி கிளைச் சிறையில் அடைத்தனர்.