வெளிநாட்டிற்கு கடந்த முயன்ற பல நூறு கோடி மதிப்புள்ள ஆறு பழங்கால சிலைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, கடை உரிமையாளரை கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீதர்ஷன் மெட்டல்ஸ் என்ற கலை பொருட்கள் விற்பனை செய்யும் கூடத்தில் பழமைவாய்ந்த சிலைகள் கடத்தப்படுவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கலை பொருட்கள் விற்பனை கூடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அங்கு பதுக்கி வைத்திருந்த கிருஷ்ணா, திருவாச்சியுடன் விநாயகர், திருக்கடையூர் நடராஜர், சிவகாமி அம்மன், அர்த்த நாரீஸ்வரர், வல்லபி கணபதி மற்றும் அம்மன் ஆகிய 6 பழங்கால ஐம்பொன் சிலைகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
மேலும் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் சிலை கடத்தல் பிரிவு போலீஸார் சிலைகளை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கடையின் உரிமையாளர் ராமலிங்கம் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. 1985-ம் ஆண்டு முதல் ஸ்ரீதர்சன் ஆர்ட் மெட்டல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருவதுடன் பழங்கால பொருட்களை வெளி நாட்டிற்கு இறக்குமதி செய்து வருவதாக விசாரணையில் தெரியவந்தது.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை தென்னாப்பிரிக்கா டர்பன் நகரில் உள்ள சிசோக்கே பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு பல நூறு கோடிக்கு விற்க பேரம் பேசி இருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு ராமலிங்கம் இந்த சிலைகளை வெளிநாட்டிற்கு விற்பதற்காக இந்திய தொல்லியல் துறையை அணுகியபோது சிலைகளின் தொன்மையை கருதி தொல்லியல் துறையால் நிராகரிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிலைகளுக்கு உண்டான ஆவணங்கள் மற்றும் சிலைகள் வாங்கியது குறித்த முறையான விளக்கம் இல்லாததால் உரிமையாளர் ராமலிங்கம் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 6 சிலைகள் எந்த கோயிலுக்கு சொந்தமானது என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.